சாப்ரா: ‘மற்ற மாநிலங்களில் பிஹாரிகள் துன்புறுத்தப்படும்போது காங்கிரஸ் தலைவர்கள் கைதட்டுகிறார்கள்’ என்று மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்)-ன் தலைவருமான சிராக் பாஸ்வான் குற்றம் சாட்டியுள்ளார்.
பிஹார் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு சாப்ராவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்றுப் பேசிய சிராக் பாஸ்வான், “நான் அரசியலில் நுழைந்ததற்குக் காரணம், மற்ற மாநிலங்களில் பிஹாரிகள் அவமதிக்கப்படும் விதம்தான். பிஹாரி என்ற வார்த்தை கூட ஒரு அவமதிப்பாக மாற்றப்பட்டது. பஞ்சாபின் முன்னாள் காங்கிரஸ் முதல்வர், காந்தி குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் முன்னிலையில், பிஹாரிகள் பஞ்சாபுக்குள் நுழைய வேண்டாம் என்று மிரட்டியதாகவும், அதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் கைதட்டியதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். தெலங்கானாவிலும் பிஹாரிகளை காங்கிரஸ் இப்படித்தான் நடத்துகிறது.
இப்படி இருக்கையில் அவர்கள் எப்படி வாக்கு கேட்க பிஹாருக்கு வர முடியும். காங்கிரஸ் கட்சியின் முதல்வர்கள் மற்ற மாநிலங்களில் பிஹாரிகளை அவமரியாதை செய்யும்போது, அவர்கள் கைதட்டுகிறார்கள், அதே காங்கிரஸ் தலைவர்கள் இங்கு வாக்கு கேட்டு வருகிறார்கள். இதுபற்றி பொதுமக்கள் அவர்களிடம் கேட்க வேண்டும்.
இந்தத் தேர்தலும், அடுத்த ஐந்து ஆண்டுகளும் பிஹாருக்கு ஒரு பொற்காலமாக இருக்கும். நவம்பர் 14 ஆம் தேதிக்குப் பிறகு நடைபெறும் பதவியேற்பு விழா, முதல்வர் மற்றும் அமைச்சரவையின் பதவியேற்புக்கான விழாவாக மட்டுமல்லாமல், வளர்ந்த பிஹாருக்கு அடித்தளம் அமைக்கும் விழாவாகவும் இருக்கும்” என்று அவர் கூறினார்.