ஹராரே,
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 1 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை ஜிம்பாப்வே வென்றது. தொடர்ந்து இரு அணிகளுக்குமான டி20 தொடரின் முதல் போட்டி இன்று நடந்தது.
இந்த போட்டிக்கான டாசில் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 180 ரன்கள் குவித்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக இப்ராகிம் ஜட்ரான் 52 ரன் எடுத்தார்.
ஜிம்பாப்வே தரப்பில் சிக்கந்தர் ராசா 3 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து 181 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த ஜிம்பாப்வே அணி, ஆப்கானிஸ்தான் வீரர்களின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
இதன் காரணமாக வெறும் 16.1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த ஜிம்பாப்வே அணி 127 ரன்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 53 ரன் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்றது. ஜிம்பாப்பே தரப்பில் அதிகபட்சமாக மபோசா 32 ரன் எடுத்தார்.
ஆப்கானிஸ்தான் தரப்பில் அபாரமாக பந்துவீசிய முஜீப் உர் ரஹ்மான் 4 விக்கெட்டும், ஓமர்சாய் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என ஆப்கானிஸ்தான் முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி வரும் 31ம் தேதி நடக்கிறது.