மும்பை: மும்பை பொவாய் பகுதியில் ஆர்.ஏ. ஸ்டூடியோ உள்ளது. இதனை ரோகித் ஆர்யா என்பவர் நிர்வகித்து வந்தார். தன்னை திரைப்பட இயக்குநர் என்று கூறிய அவர், இணைய தொடரை (வெப் சீரிஸ்) இயக்க இருப்பதாக சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்தார். இந்த
இணைய தொடருக்கு நடிகர், நடிகைகளை தேர்வு செய்ய அக்டோபர் 30-ம் தேதி ஆடிசன் நடைபெறும் என்று சமூக வலைதளங்களில் அவர் அறிவித்தார்.
இணைய தொடருக்காக நூற்றுக்கணக்கானோர் விண்ணப்பித்தனர். அவர்களில் 100 பேர் ஆடிசனில் பங்கேற்க ரோகித் ஆர்யா அழைப்பு விடுத்தார். இதன்படி நேற்று காலை 17 சிறுவர், சிறுமியர் மும்பை பொவாய் பகுதியில் உள்ள ஆர்.ஏ. ஸ்டூடியோவுக்கு சென்றனர்.
அவர்களை ஓர் அறையில் அடைத்த ரோகித் ஆர்யா வெளிப்புறமாக கதவை பூட்டினார். அவர்களுக்கு குடிநீர், உணவுகூட வழங்கவில்லை. அச்சமடைந்த சிறுவர், சிறுமியர் ஜன்னல் கதவுகள் வழியாக சாலையில் சென்றவர்களிடம் உதவி கோரினர்.
இதனிடையே ரோகித் ஆர்யா சமூக வலைதளத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது: சிறுவர், சிறுமிகளை பிணைக்கைதிகளாக அடைத்து வைத்திருக்கிறேன். நான் பெரிதாக எந்த நிபந்தனையும் விதிக்க மாட்டேன். சில சிறிய நிபந்தனைகளை மட்டும் விதிப்பேன். சில மனிதர்களிடம் சில கேள்விகளை எழுப்புவேன். அதற்கு பதில் கிடைக்க வேண்டும்.
நான் தீவிரவாதி கிடையாது. பணம் கேட்டும் மிரட்டல் விடுக்க மாட்டேன். தற்கொலை செய்து கொள்ள விரும்பவில்லை. அதற்கு பதிலாக வேறு திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்தேன். அதற்காக சிறுவர், சிறுமிகளை பிடித்து வைத்திருக்கிறேன். என்னை தாக்க முயன்றால் ஸ்டூடியோவை தீ வைத்து எரித்து விடுவேன். இவ்வாறு ரோகித் ஆர்யா வீடியோவில் மிரட்டல் விடுத்தார்.
உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீஸார், ரோகித் ஆர்யாவுடன் சுமார் 3 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் சிறுவர், சிறுமிகளை விடுவிக்க மறுத்துவிட்ட அவர், தன்னிடம் துப்பாக்கி, ரசாயனங்கள் இருப்பதாக மிரட்டல் விடுத்தார்.
வேறு வழியின்றி ஸ்டூடியோவின் கழிவறை கண்ணாடியை உடைத்து 5 போலீஸார் உள்ளே நுழைந்தனர். அவர்களை ரோகித் ஆர்யா துப்பாக்கியால் சுட முயன்றார். இதைத் தொடர்ந்து போலீஸார் நடத்திய என்கவுன்ட்டரில் ரோகித் ஆர்யா குண்டுகள் பாய்ந்து சரிந்து விழுந்தார். உடனடியாக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்து
வர்கள் தெரிவித்தனர். ஆர்.ஏ. ஸ்டூடியோவில் பிணைக்கைதிகளாக பரிதவித்த 17 சிறுவர், சிறுமியரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.  
இதுகுறித்து மும்பை போலீஸார் கூறும்போது, “இயக்குநர் என்று கூறிவந்த ரோகித் ஆர்யா மனநலம் பாதிக்கப்பட்டவர் போன்று தெரிகிறது. கடன் தொல்லையில் சிக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. அவர் விபரீதமாக முடிவு எடுப்பதற்கு முன்பாக கழிவறை ஜன்னலை உடைத்து நுழைந்து என்கவுன்ட்டர் நடத்தி சிறுவர், சிறுமியரை மீட்டோம். இவர்கள் 13 வயது முதல் 17 வயதுக்கு உட்பட்டவர்கள். ஒரு முதியவர், ஓர் இளைஞரும் மீட்கப்பட்டனர். ஆர்.ஏ. ஸ்டூடியோவில் இருந்து ஒரு துப்பாக்கி, ரசாயன பொருட்கள் கைப்பற்றப்பட்டன” என்றனர்.
