கொச்சி: கேரளாவில் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடத்தி வருகிறது. அங்கு மத்திய அரசின் பிஎம் ஸ்ரீ திட்டத்தை அமல்படுத்த மாநில அரசு அண்மையில் ஒப்புதல் அளித்தது.
ஆனால் கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பிஎம் ஸ்ரீ திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து, கேரள அமைச்சரவை கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. அதில் பிஎம் திட்டத்தில் இணைவது குறித்து ஆய்வு செய்ய கல்வி அமைச்சர் சிவன் குட்டி தலைமையில் அமைச்சர்கள் அடங்கிய 7 பேர் குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பாக கேரள காங்கிரஸ் மூத்த தலைவர் சதீசன் கூறும்போது, “இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை மார்க்சிஸ்ட் கூட்டணி அரசு ஏமாற்றுகிறது. ஆளும் கூட்டணி அரசு பிஎம் ஸ்ரீ திட்டம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தன்னிச்சையாக கையெழுத்திட்டிருக்கக் கூடாது. அமைச்சர்கள் குழுவை முன்கூட்டியே நியமித்திருக்க வேண்டும்” என்றார்.