மாஸ்கோ,
3 ஆண்டுகளுக்கு மேலாக உக்ரைனுக்கு எதிராக போரில் ஈடுபட்டு வரும் ரஷியா தன்னுடைய தாக்குதலை தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது. இந்நிலையில், மாஸ்கோ நகர ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வீரர்களை நேரில் சந்திப்பதற்காக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் சென்றார்.
போரில் ரஷியா பின்னடைவை சந்தித்து விட்டது என மேற்கத்திய நாடுகளை சேர்ந்த ஊடகங்கள் தகவல் தெரிவித்து வருகின்றன. ஆனால், வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் புதின் இந்த சந்திப்பை நடத்தி தேச பெருமையை அவர்களுக்கு உணர செய்துள்ளார். உக்ரைன் நடவடிக்கையில் காயமடைந்த வீரர்களை சந்தித்துடன், சிகிச்சை பெறும் வீரர்களின் நிலை பற்றி மருத்துவ பணியாளர்களிடம் கேட்டு அறிந்து கொண்டார்.
அப்போது அவருடன் ரஷிய பாதுகாப்பு மந்திரி சர்கே ஷொய்குவும் உடன் சென்றார். சிகிச்சையில் இருந்த வீரர் ஒருவரின் அருகே சென்று அவருடைய கையை பிடித்து நலம் விசாரித்த புதின் அவரிடம் பேசும்போது, நீங்கள் எனக்கு சிறப்பு வாய்ந்தவர் என கூறி புன்முறுவலை வெளிப்படுத்தினார். பின்னர் சுற்றியிருந்த வீரர்களை சுட்டிக்காட்டி, அவர்கள் அனைவரும் உங்களுக்கு கூட சிறப்பு வாய்ந்தவர்கள். ஏனெனில், அவர்கள் உங்கள் உயிரை காப்பாற்றியவர்கள் என்றார்.
உங்களுடைய காயங்களை பற்றிய விவரங்களை விரிவாக எனக்கு கூறினார்கள். கடவுளின் ஆசியால் நீங்கள் நலம் பெற்றிருக்கிறீர்கள். உங்களுக்காக சில பரிசுகளையும் கொண்டு வந்திருக்கிறேன். அது ஒரு மகிழ்ச்சி என்று கூறி அவரை உற்சாகப்படுத்தினார்.
தொடர்ந்து புதின், தனித்துவம் வாய்ந்த உறுதி மற்றும் சிறப்பான மனவலிமையுடன் ரஷிய வீரர்கள் உள்ளனர். சிறப்பு ராணுவ நடவடிக்கை பிரிவில் ஒவ்வொரு வீரரும் ஹீரோ போன்று செயல்படுகிறார் என புகழாரம் சூட்டினார். இந்த போரில் உக்ரைனின் 154 சதுர மைல்கள் நிலப்பரப்பை ரஷியா தன்வசப்படுத்தி உள்ளது என சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.