திருவனந்தபுரம்: கேரளாவில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் மணமகளின் தந்தை, தனது சட்டைப் பையில் ஒட்டப்பட்ட க்யூ ஆர் கோடு மூலம் மொய் வசூல் செய்த வீடியோ வைரலாக பரவியுள்ளது.
திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விருந்தினர்கள் மணமக்களை ஆசீர்வதித்து மொய் பணம் வழங்குவது நாடு முழுவதும் பின்பற்றப்படும் வழக்கம். சிலர் பரிசு பொருட்களை அன்பளிப்பாக வழங்குவர்.
தற்போது பெரும்பாலான மக்கள் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதால், திருமண நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போது மொய் பணத்தை எடுத்துச் செல்வது பலருக்கு சிரமமாக உள்ளது.
மொய் பணத்தை பெறுவதிலும், அதை கணக்கிடுவதும் திருமண வீட்டாருக்கும் சிரமமாக உள்ளது. இதை கருத்தில் கொண்டு திருமணத்துக்கு வரும் விருந்தினர்கள் எளிதில் மொய் பணத்தை செலுத்துவதற்காக மணமகளின் தந்தை க்யூ ஆர் கோர்டை தனது சட்டை பையில் ஒட்டியிருந்தார். திருமணத்துக்கு வந்த விருந்தினர்களும் அதை ஸ்கேன் செய்து பணம் செலுத்தினர். இந்த வீடியோ சமூக ஊடகத்தில் வைரலானது.
இது குறித்து பலரும் பலவிதமாக கருத்து தெரிவித்தனர். சிலர் இந்த டிஜிட்டல் முயற்சியை பாாரட்டினர். சிலர் இதை விமர்சனமும் செய்தனர். சிலர் கிண்டல் அடித்திருந்தனர்.
இந்த திருமணத்துக்கு சென்ற ஒருவர் பதிவிட்ட கருத்தில், திருமண வீட்டில் நகைச்சுவைக்காக மணமகளின் மாமா இது போல் செய்ததாகவும், சில குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே அதில் பணம் செலுத்தியதாக தெரிவித்துள்ளார்.