ஐபிஎல் 2025 தொடரில், புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தை பிடித்து, ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் 2026 தொடருக்கு ஒரு புதிய, வலுவான அணியை கட்டமைக்கும் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளது. தொடர் தோல்விகள், முக்கிய வீரர்களின் காயங்கள் மற்றும் அணியின் சமநிலையற்ற தன்மை ஆகியவற்றால் இந்த முறை, அணியில் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வர அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
Add Zee News as a Preferred Source
அதன் ஒரு முக்கிய படியாக, ஐபிஎல் 2026 மெகா ஏலத்திற்கு முன்பாக, trading window மூலம் சில வீரர்களை மற்ற அணிகளுக்கு டிரேடிங் செய்துவிட்டு, புதிய வீரர்களை அணிக்குள் கொண்டுவர ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த வகையில் குறைந்தது மூன்று முக்கிய வீரர்கள் டிரேடிங் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர், ஆப்கானிஸ்தானின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஃபசல்ஹக் ஃபாரூக்கி.

ஃபசல்ஹக் ஃபாரூக்கி
இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஃபசல்ஹக் ஃபாரூக்கி, கடந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஒரு மிக பெரிய ஏமாற்றத்தை அளித்தார். அவருக்கு வாய்ப்பளிக்கப்பட்ட 5 போட்டிகளிலும், அவரால் ஒரு விக்கெட்டைக் கூட வீழ்த்த முடியவில்லை. இது, அணியின் பந்துவீச்சுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. மேலும், ஒரு வேகப்பந்து வீச்சாளருக்கு மிக முக்கியமான பவர்பிளே மற்றும் டெத் ஓவர்களில் அவரது பந்துவீச்சு மிகவும் சுமாராகவே இருந்தது. ஓவருக்கு சுமார் 10 ரன்களை வாரி வழங்கிய அவர், எதிரணி பேட்ஸ்மேன்களின் ரன் குவிப்பை கட்டுப்படுத்த முடியாமல் திணறினார்.
அணியின் திட்டம் என்ன?
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சு, பல ஆண்டுகளாக ஜோஃப்ரா ஆர்ச்சரை மட்டுமே நம்பியுள்ளது. அவருக்கு உறுதுணையாக, ஒரு அனுபவமிக்க, திறமையான வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளரை உருவாக்க, அணி நிர்வாகம் பல ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறது. அந்த இடத்திற்கு, ஃபசல்ஹக் ஃபாரூக்கி சரியான தேர்வாக இருப்பார் என்று நம்பப்பட்டது. ஆனால், அவர் அந்த நம்பிக்கையைத் பொய்யாக்கிவிட்டார். எனவே, தற்போது, ஃபசல்ஹக் ஃபாரூக்கியை மற்றொரு அணிக்கு டிரேடிங் செய்துவிட்டு, அதற்கு பதிலாக, ஜோஃப்ரா ஆர்ச்சருடன் இணைந்து ஒரு சக்திவாய்ந்த வேகப்பந்து வீச்சு கூட்டணியை உருவாக்கக்கூடிய ஒரு அனுபவமிக்க வீரரை அணிக்குள் கொண்டுவர, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி திட்டமிட்டுள்ளது.
ஃபாரூக்கி மட்டுமல்லாமல், கடந்த சீசனில் எதிர்பார்த்த ஆட்டத்தை வெளிப்படுத்தத் தவறிய மேலும் இரண்டு வீரர்களையும் டிரேடிங் செய்ய அணி நிர்வாகம் ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது. இந்த அதிரடி மாற்றங்களின் மூலம், அணியின் பலவீனங்களை களைந்து, ஒரு சமநிலையான, வலுவான அணியை உருவாக்கி, அடுத்த ஐபிஎல் தொடரில் ஒரு வலுவான கம்பேக் கொடுக்க, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முழு மூச்சுடன் தயாராகி வருகிறது. இந்த டிரேடிங் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள், விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
About the Author
RK Spark