ஜெய்சங்கர் படம் பார்க்க 10 கி.மீ., சைக்கிள் பயணம்! – நள்ளிரவு காட்சி தந்த த்ரில் அனுபவம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்

அப்பொழுதெல்லாம் எங்களுக்கு அருகிலுள்ள தியேட்டர்களில் சினிமா பார்ப்பதை விடத் தொலை தூர இடங்களுக்குச் சென்று திரைப்படம் பார்ப்பதில் ஓர் அலாதி த்ரில்! அதிலும் முழுமையான எங்கள் குரூப் (8 பேர் அடங்கியது) சேர்ந்து விட்டால், நாலு சைக்கிள்களும் றெக்கை கட்டிப் பறக்க ஆரம்பித்து விடும்.

எல்லாம் கேரியர் வைத்த சைக்கிள்கள்தான். எல்லோருக்கும் நன்றாகச் சைக்கிள் ஓட்டத் தெரியுமென்பதால் ஒருவர் மாற்றி ஒருவர் மிதிக்க வசதியாக, கேரியர் வைத்த சைக்கிள்களை எடுத்துக் கொள்வோம். ஒன்றிரண்டு பேர் மட்டுமே சொந்த சைக்கிள் வைத்திருந்தோம். எனவே ஒன்றிரண்டை வாடகைக்கு எடுத்துக் கொள்வோம்.

இரண்டு பேர், நாலுபேர் என்றால், பெரும்பாலும் 10 கி.மீ., தூரத்திலுள்ள திருத்துறைப் பூண்டிதான்! அதுவே 6 பேரோ 8 பேரோ என்றால் நிச்சயம் தொலை தூரந்தான்! அப்பொழுது பட்டுக்கோட்டை, நாகப்பட்டிணம் என்றெல்லாம் விளையாட்டாக வண்டிகளைத் தட்டி விடுவதுண்டு. முன்னது சுமார் 45 கிலோ மீட்டர் தூரத்திலும், பின்னது ஏறத்தாழ 60 கிலோ மீட்டர் தூரத்திலும். இரண்டு இடங்களுக்கும் இரண்டொரு முறை சென்று வந்ததாக ஞாபகம். ஒரு முறை பட்டுக்கோட்டை முருகையா தியேட்டருக்குப் போய் வந்த வரலாறுதான் இது.

எங்கள் குரூப்பில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நடிகர் பேவரிட் என்றாலும், அப்பொழுது ஓஹோ என்றிருந்த ஜெய்சங்கரை எல்லோருக்குமே பிடிக்கும். அவர் நடிப்பில் வெளிவந்த ‘உயிரா மானமா?’ படத்தை அன்றைய தின செகண்ட் ஷோவாகப் பட்டுக்கோட்டையில் பார்ப்பதென்று மாலைதான் முடிவு செய்தோம்.

நண்பர்கள் இருவர் வெளியூர் சென்றிருந்ததால், அரை டஜன் பேர் மட்டும் ரெடியானோம். வாடகைக்கு நல்ல வண்டியாகப் பார்த்து ஒன்றை எடுத்துக் கொண்டோம்.

இரவுச் சாப்பாட்டை விரைவாக முடித்தபோதே வீட்டாருக்கு விஷயம் விளங்கி விட்டது. வழக்கம் போலப் பாட்டி வீட்டு வாசலுக்கு அனைவரும் வந்து, எங்கள் எக்ஸ்பெடிஷனை ஆரம்பித்தோம். நானும் என் கசினும் ஒரு சைக்கிளில். எனது சகோதரரும் சோமுவும் மற்றொரு சைக்கிளில். மற்ற நண்பர்கள் இருவரும் வேறொரு சைக்கிளில் என்று தொடங்கிற்று பயணம்.

எங்களிடம் பொதுவாகவே பைசா குறைவாகவே இருக்கும். டிக்கட்டுக்குத்தான் வரும். டீ, டிபன் என்று தேவைப்படும்போதெல்லாம் அந்தச் செலவுகளை அனாயாசமாகச் சமாளிப்பது சோமு என்ற சோமசுந்தரம்தான். அவருடையதும் நடுத்தரக் குடும்பந்தான். ஆனால் பிறக்கும் போதிருந்தே அவர் ஹார்ட் வீக் என்று மருத்துவர்கள் அறிவித்திருந்ததாலும், அதிக நாட்கள் உயிர் வாழ்வது கடினமென்று கூறியிருந்ததாலும், வீட்டார் அவர் செலவுக்கென்று தாராளமாகக் கொடுத்து விடுவார்கள்.

மூத்த பையன் வேறு. நண்பர்களே உலகமென்று, தாராளமாகச் செலவு செய்வார். அப்பொழுதே செங்கிப்பட்டி மருத்துவ மனைக்கு அடிக்கடி சென்று, அங்கேயே சில நாட்கள் தங்கி சிகிச்சை பெற்று வருவார். ‘நித்திய கண்டம் பூரண ஆயுசு’ என்று கூறுவார்களே, அது போல நாட்களை ஓட்டி வந்தார். ஆனால் 22 வயதைத் தாண்டி அவரால் வாழ முடியவில்லை. அதற்குள் டிகிரி முடித்து, இறந்து போனார்.

பாண்டி சென்று ரைட்டில் திரும்பினால் திருத்துறைப் பூண்டி, நாகப்பட்டிணம் எல்லாம். லெப்டில் திரும்பினால் பட்டுக்கோட்டை சாலை. சங்கந்தி, உதய மார்த்தாண்ட புரம், முத்துப்பேட்டை, தம்பிக்கோட்டை, பரக்கலக்கோட்டை என்று சைக்கிள் நிற்காமல் ஓடிக் கொண்டேயிருந்தது.

பரக்கலக்கோட்டை பொதுவுடையாரைச் சாலையில் சைக்கிளை நிறுத்தி வணங்கி விட்டு, பயணத்தைத் தொடர்ந்தோம். நேரம் ஆக, ஆக, கால்கள் சோர்ந்து போக ஆரம்பித்தன. வண்டியின் வேகம் குறைகையில், பின்னாலிருப்பவர் இரண்டு பக்கமும் கால்களைப் போட்டு, அவரும் பெடல் பண்ண ஆரம்பித்து விடுவார். உடலில் பரவும் சினிமா உற்சாகம் கால்களுக்கு அதிக ரத்தத்தை அனுப்பி விடும். அப்புறமென்ன? வீலின் வேகம் கூடி விடும்.

நகரின் மின் ஒளி வானத்தில் பரவுவதைப் பார்த்தே, டவுனிலிருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறோம் என்பதை அறிந்து கொண்டு, அதற்கேற்றாற் போல வேகத்தைக் கூட்டவும், குறைக்கவும் செய்வோம்.

ஒரு வழியாக பட்டுக்கோட்டை நகரத்திற்குள் நுழைந்து, தியேட்டரை அடைந்தோம். அதற்குள்ளாக பத்துப் பதினைந்து நிமிடம் தாமதமாகி விட்டது. படம் ஓடிக் கொண்டிருக்கிறது. சைக்கிள்களைப் பார்க்கிங் லாட்டில் விட்டு விட்டுக் கவுண்டருக்கு ஓடினோம். கவுண்டர் க்ளர்க்கோ டிக்கட் முடிந்து விட்டதாகவும், கவுண்டரை மூடப் போவதாகவும் கூறி எங்களுக்கு ஷாக் கொடுத்தார்.

“சார்! சார்! ரொம்ப தூரத்திலிருந்து வந்திருக்கிறோம். ஆறே ஆறு டிக்கட்தான் சார்.”

“அப்படியா? அப்ப முன்னாடியே வந்திருக்கணும்! இப்படி லேட்டாவா வருவீங்க! என்னால எதுவும் செய்ய முடியாதே!”

“அப்படிச் சொல்லாதீங்க சார். கொஞ்சம் தயவு பண்ணுங்க சார்!” இவ்வளவு தூரம் வந்தும் சினிமா பார்க்க முடியாதா? என்ற பயம் எங்களைத் தொற்றிக் கொள்ள, எனது சகோதரர், “சார்! ஒங்களால ஒதவ முடியலைன்னா, நாங்க மானேஜரைப் பார்க்கலாமா?” என்க,

“ஓ! தாராளமாப் போய்ப் பாருங்க! நான் சொன்னதைத்தான் அவரும் சொல்வாரு!” என்றபடி கவுண்டர் க்ளர்க் நழுவினார்.

மானேஜர் அறைக்கு ஓடினோம் அனைவரும். “சார், ரொம்ப தூரத்திலிந்து வந்ததால லேட்டாயிடிச்சு! ப்ளீஸ் சார்! ஆறு டிக்கட் கொடுக்கச் சொல்லுங்க சார்!” கோரசாக அனைவரும் கூற, “அப்படியா? நீங்க சொல்றது உண்மைதாங்கிறதுக்கு என்ன அத்தாட்சி?” என்று ஒரு கிடுக்கிப் பிடி போட்டார் அவர். இப்பொழுது போல ஆதார், பான் கார்ட் எல்லாம் அப்பொழுது இல்லையே! அதிகம் ஏன்? பள்ளியில் கூட ஐடி கார்ட் கிடையாதே!

யோசித்த எனது சகோதரர் ஓர் உபாயம் செய்தார். அவசரமாகப் பார்க்கிங் லாட் சென்று வாடகை சைக்கிளைத் தள்ளிக் கொண்டு வந்தார். அதன் மட்கார்டில் என்.எஸ்.எம்., கே.பி.எம்., (NSM, KPM) என்று மேலும் கீழுமாக எழுதப்பட்டிருந்ததை மானேஜரிடம் காட்டினார். “பாருங்க சார்! NSM என்பது வாடகை சைக்கிள் கம்பனியின் பெயர்; KPM என்பது கீழப்பெருமழை என்பதன் சுருக்கம்.”

மானேஜரின் சொந்தக் காரர்தான் NSM என்பது மானேஜருக்குப் புரிந்தாலும், அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல், “அவ்வளவு தூரத்திலிருந்தா வந்தீங்க?” என்று கூறிய அவர், உதவியாளரைக் கூப்பிட்டு, “இவர்களுக்கு டிக்கட் கொடுக்கச் சொல்லு! எடம் இல்லாட்டா, ஒரு பெஞ்சைப் போட்டு இவர்களை நீயே ஒக்கார வெச்சிட்டு வா!” என்று எங்கள் வயிற்றில் பால் வார்த்தார்!

“கொடியில் இரண்டு மலருண்டு, மலரில் பனியின் துளி உண்டு, பனியில் கதிரவன் ஒளியுண்டு, எதிலும் புதுமை மணம் உண்டு!” அப்புறமென்ன? சைக்கிளுக்குப் பெரிய நன்றி சொல்லி விட்டு, ஜெய்யை ரசித்தோம்!

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.