சென்னை: தமிழகத்தில் உள்ள யானை வழித்தடங்கள் முழுமையாக கண்டறியப்பட்டு, அது குறித்து இறுதி அறிக்கை வரும் பிப்ரவரி மாதம் அரசிடம் தாக்கல் செய்ய இருப்பதாக வனத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் யானைகள் வழித்தடங்கள் பாதுகாப்பது தொடர்பாக, விலங்குகள் நல ஆர்வலர் முரளீதரன் என்பவர் தாக்கல் செய்த வழக்கு, நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரதசக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது வனத்துறை தரப்பில், ஒருங்கிணைந்த யானைகள் வழித்தடங்களை கண்டறிந்து, அது பற்றிய விவரங்களை தாக்கல் செய்ய, தமிழக அரசால் இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
யானை வழித்தடங்களாக அறிவிக்கப்பட்ட பகுதிகள் குறித்து, அதிகாரிகள் மட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு, அப்பகுதியில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு செய்வதற்காக, நவம்பர், டிசம்பர் மாதங்களில் பொது மக்களிடம் கருத்து கூட்டங்களை அரசு நடத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதன்பின், யானை வழித்தடங்கள் தொடர்பான இறுதி அறிக்கை, அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இது தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை நவ.28-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.