ராய்ப்பூர்: மாவோயிஸ்ட் வன்முறையால் பாதிக்கப்பட்ட மாநிலம் என்ற அடையாளத்தில் இருந்து செழிப்பு மற்றும் பாதுகாப்பின் சின்னமாக சத்தீஸ்கர் மாறி இருப்பது ஊக்கமளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கரின் புதிய சட்டமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி இன்று திறந்துவைத்தார். பின்னர் பேசிய அவர், “சட்டமன்றம் என்பது சட்டங்களை உருவாக்குவதற்கான இடம் மட்டுமல்ல, மாநிலத்தின் விதியை வடிவமைப்பதற்கான துடிப்பான மையம். சட்டமன்றத்தில் இருந்து வெளிப்படும் ஒவ்வொரு சிந்தனையும் சேவை உணர்வையும், வளர்ச்சிக்கான அர்ப்பணிப்பையும், இந்தியாவை மிகப் பெரிய உயரத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்கான நம்பிக்கையையும் பிரதிபலிக்க வேண்டும்.
சீர்திருத்தங்களை துரிதப்படுத்தும், மக்களின் வாழ்க்கையை எளிதாக்கும், அவர்களின் வாழ்க்கையில் இருந்து அரசாங்கத்தின் தேவையற்ற தலையீட்டை நீக்கும் சட்டங்கள் இங்கு இயற்றப்பட வேண்டும். அரசாங்கமே இல்லை என்ற நிலையோ அல்லது தேவையற்ற தலையீடுகளோ இரண்டுமே கூடாது.
இந்தியா பயங்கரவாதிகளின் முதுகெலும்பை உடைத்துவிட்டது. இப்போது சத்தீஸ்கரும் மாவோயிஸ்ட் வன்முறையில் இருந்து விடுபடுவதை நோக்கி நகர்கிறது. மாவோயிஸ்ட் வன்முறைக்கும், பின்தங்கிய நிலைக்கும் பெயர் பெற்ற மாநிலம் என்ற நிலையில் இருந்து செழிப்பு, பாதுகாப்பு, நிலைத்தன்மை கொண்ட மாநிலம் என்ற நிலையை நோக்கி உத்வேகம் அளிக்கும் பயணத்தை சத்தீஸ்கர் கண்டுள்ளது. மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தற்போது வளர்ச்சி அலையும் புன்னகையும் சென்று சேர்ந்துள்ளன. சத்தீஸ்கர் மக்களின் கடின உழைப்பும், அடுத்தடுத்து அமைந்த பாஜக அரசுகளின் தொலைநோக்குத் தலைமையும் இந்த மாற்றத்துக்குக் காரணம்.
இந்தியா ஜனநாயகத்தின் தாய். புனிதமான செங்கோல், நாடாளுமன்றத்தை அலங்கரிக்கிறது. பாரம்பரியத்தையும் வளர்ச்சியையும் ஒன்றாகக் கொண்டு இந்தியா முன்னேறி வருகிறது. அரசாங்கத்தின் ஒவ்வொரு கொள்கை முடிவிலும் இது தெளிவாகத் தெரிகிறது. 2047ம் ஆண்டுக்குள், வளர்ந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை அடைவதில் சத்தீஸ்கர் முக்கிய பங்கு வகிக்கும்” என தெரிவித்தார்.