ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு தடைவிதிக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறிய கருத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலடி கொடுத்துள்ளார்.
தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசிய அமித்ஷா, “நாட்டை சிறந்த இடமாக மாற்ற என்னைப் போன்ற லட்சக்கணக்கான இளைஞர்களை ஊக்குவித்த அமைப்பு ஆர்எஸ்எஸ் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அது தேசபக்தி மற்றும் ஒழுக்கத்தின் மதிப்புகளை விதைத்துள்ளது. ஆர்எஸ்எஸ் உருவாக்கிய இரண்டு பேர் (அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் நரேந்திர மோடி) இந்த நாட்டின் பிரதமர்களாகி விட்டதையும் நாம் காண வேண்டும். அவர்கள் இருவரும் இந்த நாட்டின் சிறந்த பிரதமர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்கள்.
நாட்டின் வளர்ச்சிக்கு, சமூகத்திற்கு சரியான திசையைக் காட்ட, நாட்டு மக்களை ஒன்று திரட்ட, இளைஞர்களை தங்களுக்காக மட்டுமல்ல, நாட்டிற்காகவும் அழைத்துச் செல்ல ஆர்எஸ்எஸ் அமைப்பின் பங்களிப்பு அளப்பரியது. கார்கேவின் நோக்கம் எனக்குப் புரிகிறது. ஆனால் அது ஒருபோதும் நிறைவேறாது” என்று அமித்ஷா தெரிவித்தார்.
முன்னதாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, “நாட்டின் தற்போதைய சட்டம் – ஒழுங்கு நிலைக்கு பாஜகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும்தான் காரணம். சர்தார் வல்லபாய் படேல் முன்வைத்த கருத்துகளை பிரதமர் நரேந்திர மோடி உண்மையிலேயே மதிக்கிறார் என்றால் அவர், ஆர்எஸ்எஸ் அமைப்பை தடை செய்ய வேண்டும். இது எனது தனிப்பட்டக் கருத்து. இதை நான் வெளிப்படையாகவே சொல்கிறேன்.காந்தி இறந்ததை அடுத்து ஆர்எஸ்எஸ் தடை செய்யப்பட்டது” என்று கூறியிருந்தார்.