பிஹார் மக்களின் நிகழ்காலத்தைப் பற்றி பாஜக தலைவர்கள் பேசுவதில்லை: பிரியங்கா காந்தி

பெகுசராய் (பிஹார்): பாஜக தலைவர்கள் கடந்த காலம் குறித்தும் எதிர்காலம் குறித்துமே பேசுகிறார்களே தவிர நிகழ்காலம் பற்றி பேசுவதில்லை என பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பெகுசராய் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரியங்கா காந்தி, “பிஹாரில் இருந்துதான் மகாத்மா காந்தி பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான தனது போராட்டத்தைத் தொடங்கினார். பிஹார் நிலம் நாட்டுக்கு நிறைய கொடுத்துள்ளது. இந்த நிலம் நாட்டுக்கு சுதந்திரம், முன்னேற்றம், சிறந்த தலைவர்கள், முக்கிய அதிகாரிகள், சிறந்த எழுத்தாளர்கள், கவிஞர்களைக் கொடுத்தது. ஆனால், இன்றைய பிஹாரைப் பார்க்கும்போது, இவ்வளவு பெரிய நிலம் ஏன் வளர்ச்சியடையவில்லை என்ற கேள்வி எழுகிறது.

இங்கு இருப்பது இரட்டை இயந்திர அரசு அல்ல. இது ஒற்றை இயந்திர அரசு. இங்கு நடக்கும் அனைத்தும் மத்திய அரசால் இயக்கப்படுகிறது. முதல்வர் நிதிஷ் குமாரை பாஜக மதிப்பதில்லை; அவர் கூறுவதை கேட்பதில்லை.

பிஹார் மண்ணில் இருந்து மகாத்மா காந்தி தொடங்கிய போராட்டம் நமது அரசியலமைப்புக்கானது. அரசியலமைப்புதான் உங்களுக்கு அதிகாரத்தை அளித்தது, உங்களுக்கு நம்பிக்கையை அளித்தது, வாக்குரிமை எனும் மிகப் பெரிய உரிமையை வழங்கியது. ஆனால், பாஜகவும் நரேந்திர மோடியும் இந்த உரிமையை பலவீனப்படுத்தவே பாடுபட்டுள்ளனர்.

20 ஆண்டுகளாக பிஹாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் உள்ளது. இந்த ஆட்சி உங்கள் உரிமைகளை பலவீனப்படுத்தி உள்ளது. நீங்கள் சமமாக நடத்தப்படவில்லை. உங்களைப் பிரிக்க அரசியல் பயன்படுத்தப்பட்டது. உங்களை திசை திருப்ப பல்வேறு பிரச்சினைகள் எழுப்பப்பட்டன.

சமீபத்தில் பிஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் ரத்து செய்யப்பட்டன. இவை வெறும் வாக்குகள் அல்ல; உங்கள் உரிமைகள். பாஜகவும் நரேந்திர மோடியும் வாக்குத் திருட்டை நாட காரணம், மக்கள் விழித்தெழுந்துவிட்டார்கள் என்பதை உணர்ந்து கொண்டதுதான்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி தேர்தலுக்கு முன்னதாக ரூ.10,000 வழங்கியது. அந்த பணத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள். ஆனால், அவர்களுக்கு வாக்களிக்காதீர்கள். உங்கள் வாக்குகளை அவர்கள் வாங்க அனுமதிக்காதீர்கள். அவர்களின் நோக்கம் நல்லதல்ல. தேர்தல் நெருங்கிவிட்டதால் அவர்கள் சுய ஆதாயத்துக்காக ரூ. 10,000 கொடுக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளனர். தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பிஹாரில் 20 ஆண்டுகளாக உள்ளது. இதை ஏன் அவர்கள் முன்பே செய்யவில்லை?

பிஹாரில் ஊழல் பெருகி வருகிறது. எல்லா இடங்களிலும் கொள்ளையடிப்பது பரவலாக நடக்கிறது. தேர்வுத் தாள்கள் கசிகின்றன, லஞ்சம் இல்லாமல் மின் கம்பங்கள் அமைக்கப்படுவதில்லை, லஞ்சம் இல்லாமல் சாலைகள், பாலங்கள் கட்டப்படுவதில்லை. இதுகுறித்தெல்லாம் யாராவது கேள்வி கேட்டால், அவர்கள் அடக்கப்படுகிறார்கள். யாராவது எதிர்ப்பு தெரிவித்தால் அவர்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.

பாஜகவும் நரேந்திர மோடியும் கடந்த காலத்தைப் பற்றியும் எதிர்காலத்தைப் பற்றியுமே பேசுகிறார்கள். நிகழ்காலம் பற்றி அவர்கள் பேசுவதில்லை. காங்கிரஸ் நாட்டுக்கு வளர்ச்சியைக் கொண்டு வந்தது. நாட்டில் நிறுவப்பட்ட தொழிற்சாலைகள், ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ் ஆகியவை ஜவஹர்லால் நேருவால் உருவாக்கப்பட்டவை. நாங்கள் கடந்த காலத்தைப் பற்றி பேச தொடங்கினால், அவர்கள் வாயடைத்துப் போவார்கள். ஆனால், நாம் கடந்த காலத்தைப் பற்றி அல்ல நிகழ்காலம் குறித்தே பேசுகிறோம்.

பிஹாரில் தொழிலதிபர்களுக்கு குறைந்த விலையில் நிலங்கள் விநியோகிக்கப்படுகின்றன. ஆனால், உங்களுக்கு எதுவும் கிடைப்பதில்லை. இது நீங்கள் விழித்துக்கொள்ள வேண்டிய நேரம். உங்கள் விதியை நீங்கள் உங்கள் கைகளில் எடுத்துக்கொள்ள வேண்டிய நேரம். இல்லாவிட்டால், பெரிய தலைவர்கள் வந்து கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் பற்றி பேசுவார்கள். ஆனால், உங்கள் நிகழ்காலத்தைப் பற்றி பேச மாட்டார்கள்.

பணவீக்கம், வேலையின்மை, இடப்பெயர்வு போன்ற பிரச்சினைகள் குறித்து அவர்கள் பேசுவதில்லை. நீங்கள் இன்று எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு அவர்கள் தீர்வு தருவதில்லை. பிஹாரில் பெண்கள், குழந்தைகள், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் ஆகியோருக்கு எதிரான குற்றங்கள் உச்சத்தில் உள்ளன. பெரிய தொழிலதிபர்களும் தலைவர்களும்கூட இங்கு கொல்லப்படுகிறார்கள். இந்த சூழ்நிலையை நாம் மாற்ற வேண்டும்.

பிஹாரில் பாஜக – ஜேடியு அரசாங்கத்துக்கான கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டது. பொதுமக்கள் தங்கள் வாக்குகள் மூலம் அவர்களுக்கு வலுவான பாடம் கற்பிப்பார்கள்.” என தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.