விவசாயிகள் கடனை தள்ளுபடி
நாட்டிலேயே மகாராஷ்டிராவில்தான் அதிக அளவில் ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் தற்கொலை செய்து வருகின்றனர். எந்த புதிய அரசு பதவியேற்றாலும், விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய தயங்குவதில்லை.
அதோடு, தேர்தல் வாக்குறுதியிலும் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற வாக்குறுதியும் கட்டாயம் இடம்பெறும்.

முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்
இந்த ஆண்டு பருவமழை பெய்த பிறகும் தொடர்ந்து மழை பெய்ததால், விவசாயிகளுக்கு கடுமையான இழப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
அதோடு, கடந்த ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த பா.ஜ.க தலைமையிலான கூட்டணி அரசும், விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று குறிப்பிட்டிருந்தது.
இந்த வாக்குறுதியை உடனே அமல்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து, விரைவில் விவசாயிகளின் கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
துணை முதல்வர் அஜித் பவார்
இது குறித்து புனே அருகில் உள்ள பாராமதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய துணை முதல்வர் அஜித் பவார் கூறியதாவது:
“விவசாயிகளுக்கு வட்டியில்லாமல் கடன் கொடுக்கிறோம். வட்டியில்லாமல் கடன் வாங்கும்போது, அதனை சரியான முறையில் திருப்பிச் செலுத்துவது மிகவும் முக்கியம்.
எத்தனை முறைதான் விவசாயக் கடன்களை அரசு தள்ளுபடி செய்து கொண்டே இருக்கும்? எத்தனை முறைதான் இலவசங்களை வழங்கிக் கொண்டே இருக்கும்?

இதற்கு முன்பு சரத் பவார், தேவேந்திர பட்னாவிஸ், உத்தவ் தாக்கரே ஆகியோர் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்துள்ளனர். தற்போது மாநில நிதிச்சுமை அதிகமாக உள்ளது. எனவே புத்தாண்டில் விவசாயக் கடன் தள்ளுபடி செய்வது தொடர்பான அறிவிப்பு வெளியாகும். விவசாயக் கடன் தள்ளுபடி எங்களது தேர்தல் வாக்குறுதியில் இடம் பெற்றிருந்தது. எனவே அதனை நிச்சயம் அமல்படுத்துவோம்.
ஆனால் இது திரும்பத் திரும்ப நடக்கக்கூடிய ஒன்றாக இருக்கக் கூடாது. விவசாயிகளுக்கும் இதில் பொறுப்பு இருக்கிறது. அவர்கள் கடனை சரியான முறையில் திருப்பிச் செலுத்த வேண்டும். இன்னும் ஒரு வாரத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரும்.
எனவே, இப்போது உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி ஒதுக்க முடியாது. தேர்தல் முடிந்த பிறகுதான் நிதி ஒதுக்க முடியும்,” என்று தெரிவித்தார்.
மனோஜ் ஜராங்கே
அஜித் பவாரின் பேச்சுக்கு மராத்தா இடஒதுக்கீடு ஆர்வலர் மனோஜ் ஜராங்கே கடுமையாக பதிலளித்தார்.
இது குறித்து அவர் அளித்த பேட்டியில், “அடுத்த தேர்தலில் வாக்களிக்கும் போது விவசாயிகள் அஜித் பவாரின் வார்த்தைகளை நினைவில் கொள்ள வேண்டும். எங்கள் வாக்குகள் இலவசங்கள் அல்ல என்பதை அவர் உணர வேண்டும்,” என்றார்.

மாநில வருவாய்த்துறை அமைச்சர்
முன்னதாக மாநில வருவாய்த்துறை அமைச்சர் சந்திரசேகர் பவன்குலே அளித்திருந்த பேட்டியில், “விவசாயக் கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பு வெளியாகும் வரை, விவசாயிகளின் வங்கிக் கடனை திரும்ப வசூலிக்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா முதல்வரின் பொருளாதார ஆலோசகர் பிரவின் பர்தேஷி தலைமையில் ஒரு நிபுணர் குழு இதற்காக அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழு வரும் ஜூன் 30ஆம் தேதிக்குள் இந்த விஷயத்தில் முடிவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை கடுமையான கடன் மீட்பு நடவடிக்கைகளை எடுக்காமல் இருக்க வங்கிகளுக்கு அறிவுறுத்தப்படும்,” என்று பவன்குலே கூறினார்.
விவசாயிகள் சங்கத் தலைவர்
முன்னதாக விவசாயிகள் சங்கத் தலைவர் பச்சு காடு, மும்பையில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸை சந்தித்து, விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அக்கோரிக்கை வரும் ஜூன் மாதத்திற்குள் நிறைவேற்றப்படும் என்று அரசு தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.