வாஷிங்டன்: அமெரிக்க நிதி நிறுவனத்திடம் இருந்து 500 மில்லியன் டாலர் கடன் பெற்று இந்திய வம்சாவளி சிஇஓ மோசடி செய்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள நிதி நிறுவனம் பிளாக் ராக். இந்நிறுவனத்தின் துணை நிறுவனமான எச்பிஎஸ் நிறுவனத்திடம், பிராட்பேண்ட் டெலிகாம் மற்றும் பிரிட்ஜ்வாய்ஸ் என்ற தொலைத் தொடர்பு நிறுவனங்களை நடத்தி வரும் இந்திய வம்சாவளி சிஇஓ பாங்கிம் பிரம்பட் என்பவர் கடந்த 2020-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை 500 மில்லியன் டாலருக்கு மேல் கடன் பெற்றுள்ளார்.
கடனாக பெற்ற பணத்தை எல்லாம் இவர் இந்தியா மற்றும் மொரிசீயஸ் நாட்டுக்கு மாற்றியுள்ளார். சில இ-மெயில் முகவரிகளில் மாற்றங்கள் இருந்ததை கண்டுபிடித்த எச்பிஎஸ் நிறுவன ஊழியர் ஒருவர், பிராட்பேண்ட் டெலிகாம் மற்றும் பிரிட்ஜ் வாய்ஸ் நிறுவனம் முறைகேடுகள் செய்வதை கண்டறிந்தார். இது குறித்து எச்பிஎஸ் நிறுவன அதிகாரிகள் பிரம்பட்டிடம் கேட்டபோது, அது பற்றி கவலைப்பட வேண்டாம், கடனை அடைத்து விடுவோம் என கூறியுள்ளார். அதன்பின் அவர் எந்த கேள்விகளுக்கும் பதில் அளிக்கவில்லை.
இதையடுத்து எச்பிஎஸ் நிறுவன அதிகாரிகள் கடந்த ஜூலை மாதம் பிரம்பட் நிறுவனங்களுக்கு சென்றபோது அவை மூடப்பட்டு இருந்தன. கடந்த 2 ஆண்டுகளாக பிரம்பட் நிறுவனங்கள் அளித்த வாடிக்கையாளரின் இ-மெயில்கள், வாடிக்கையாளர்கள் பிரம்பட் நிறுவனத்துடன் செய்த ஒப்பந்தங்கள் எல்லாம் போலியானவை என கண்டறியப்பட்டது.
கடன் அடமானமாக காட்டிய சொத்துக்கள் எல்லாம் விற்கப்பட்டு இந்தியா மற்றும் மொரிசீயஸில் உள்ள வங்கி கணக்குகளுக்கு மாற்றப்பட்டு விட்டன. கடந்த ஆகஸ்ட் மாதம் பிரம்பட்டின் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் திவால் ஆனதாக அறிவிக்கப்பட்டன. 500 மில்லியன் டாலருக்கு மேல் கடன் பெற்று மோசடி செய்த பாங்கிம் பிரம்பட் தற்போது இந்தியாவில் இருப்பதாக நம்பப்படுகிறது.