திருவனந்தபுரம்,
சபரிமலை அய்யப்பன் கோவிலில் சன்னிதானத்தில் துவார பாலகர் சிலை கவசங்கள் பதிக்கப்பட்டிருந்தது. இந்த கவசம் தங்க முலாம் பூசப்பட்டவை. இந்த கவசத்தை புதுப்பிப்பதற்காக உன்னிகிருஷ்ணன் போற்றி மூலம் சென்னைக்கு கடந்த 2019-ம் ஆண்டு கொண்டு செல்லப்பட்டு மீண்டும் சபரிமலைக்கு கொண்டு வரப்பட்டது.இந்த கவசத்தில் இருந்த 200 பவுன் தங்கத்தை உன்னி கிருஷ்ணன் போற்றி மற்றும் அப்போதைய திருவிதாங்கூர் தேவஸ்தான அதிகாரிகள் 9 பேர் அபகரித்த பகீர் தகவல் சமீபத்தில் வெளியானது. இதுதொடர்பாக 10 பேர் மீது சிறப்பு விசாரணை குழுவினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கு சம்பந்தமாக முதலில் உன்னி கிருஷ்ணன் போற்றியை அதிரடியாக கைது செய்தனர். இதனை தொடர்ந்து இந்த வழக்கில் திருவிதாங்கூர் தேவஸ்தான முன்னாள் நிர்வாக அதிகாரி முராரிபாபுவை கடந்த 22-ந் தேதி கைது செய்தனர். இவர் தான் தங்கம் அபகரிக்கப்பட்ட சமயத்தில் அதிகாரியாக இருந்தவர்.
அதாவது இவர், துவார பாலகர் சிலை கவசங்கள் சென்னைக்கு அனுப்பப்பட்ட போது சபரிமலை பதிவேட்டில் தாமிரத்திலானது என பதிவு செய்துள்ளார். இதேபோல் நிர்வாக அதிகாரியாக இருந்த சுதீஷ்குமாரை சிறப்பு குழுவினர் நேற்றுமுன்தினம் அதிரடியாக கைது செய்தனர். பல ஆண்டுகளாக சபரிமலையில் பணிபுரிந்து வரும் இவருக்கு தங்கத்தகடுகள் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். ஆனால் முராரிபாபுவுடன் சுதீஷ்குமாரும் சேர்ந்து தாமிரதகடு என கூறி திட்டமிட்டு மறைத்துள்ளார். இந்த வழக்கில் இதுவரை 3 பேர் கைதான நிலையில் மேலும் 7 பேரை போலீசார் கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.