புதுடெல்லி: மேற்கு உ.பி.யின் ஷாம்லி மாவட்டம், கைரானா தொகுதி சமாஜ்வாதி கட்சியின் எம்.பி.இக்ரா ஹசன். இவரது தொகுதியில் பாபா சமந்தாஸ் என்ற பிரபல கோயில் உள்ளது.
கியான் பிக் ஷு மகாராஜ் என்பவரது நினைவாக இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. இங்கு கியான் பிக்ஷு மஹராஜின் 173-வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் கலந்துகொண்ட முஸ்லிம் எம்.பி.யான இக்ரா ஹசன், தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கோயில் வளர்ச்சிப் பணிக்கு ரூ.10 லட்சம் ஒதுக்குவதாக அறிவித்தார்.
விழாவில் அவர் பேசுகையில், “பொது நலத்திட்டங்களில் பாஜக அரசு சாதிப் பாகுபாடு காட்டுகிறது. பொது நலப் பணிகளுக்கு தற்போதைய அரசு தடைகளை ஏற்படுத்துகிறது. பொது சேவையை விட சாதி சமன்பாடுகளுக்கு அரசு முன்னுரிமை அளிக்கிறது. பின்தங்கிய சமூகத்தினருக்கு தீங்கு விளைவிக்கிறது” என்றார்.
நாடாளுமன்ற விதிகளின்படி, எம்.பி. ஒருவர் தனது தொகுதி மேம்பாட்டு நிதியை மதம் சார்ந்த பணிகளுக்கு அளிக்க முடியாது. இதனால் இக்ராவின் இந்த அறிவிப்பு சர்ச்சைக்குள்ளாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை இதை பாஜக எம்.பி.க்கள் விமர்சித்தால் அதில் அரசியல் லாபம் தேடவே இக்ரா ஹசன் அறிவித்திருப்பதாக கருதப்படுகிறது.
இக்ராவின் சகோதரர் நஹீத் ஹசனும் 3 முறை சமாஜ்வாதி எம்.பி.யாக இருந்தார். இவர் சிறையில் இருந்ததால் இக்ரா முதல்முறையாக தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யானார்.