புதுடெல்லி: டெல்லியின் சாந்தினி சவுக் மக்களவை தொகுதி எம்.பி. பிரவீன் கண்டல்வால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
டெல்லியின் வரலாறு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானது மட்டுமல்ல. அது இந்திய நாகரிகத்தின் உயிருள்ள சின்னமாகவும் யமுனை நதிக்கரையில் பாண்டவர்கள் நிறுவிய இந்திரபிரஸ்த நகரின் சிறப்புமிக்க பாரம்பரியத்தின் வெளிப்பாடாகவும் திகழ்கிறது. மகாபாரத காலத்தில் மிகவும் செழிப்பான, அழகான மற்றும் நன்கு திட்டமிடப்பட்ட நகரங்களில் ஒன்றாக இருந்தது. நமது கலாச்சாரம், பாரம்பரியத்தை மீட்க பிரதமர் நரேந்திர மோடி முன்னுரிமை கொடுத்து வருகிறார்.
அதன்படி, அயோத்தி, காசி, பிரயாக்ராஜ் ஆகிய நகரங்களின் தொன்மையான அடையாளங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நாட்டின் தலைநகர் டெல்லியின் பெயரையும் இந்திரபிரஸ்தம் என மாற்ற வேண்டும். இதுபோல டெல்லி ரயில் நிலையத்துக்கும் இந்திரபிரஸ்த ஜங்ஷன் என பெயர் சூட்ட வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.