தமிழகத்தில் எஸ்ஐஆர் நடவடிக்கைகளை நிறுத்தாவிடில் வழக்கு: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தத்தை தேர்தல் ஆணையம் நிறுத்தி வைக்காவிட்டால் உச்ச நீதிமன்றத்தில் அனைத்துக் கட்சிகள் சார்பில் வழக்கு தொடர தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிஹாரில் நடைபெற்ற குளறுபடிகளை சரி செய்யாமல் தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் எஸ்ஐஆர். நடத்துவது வாக்குரிமையை பறிக்கும் செயல் என அத்தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், தேமுதிக, விசிக, சிபிஎம், சிபிஐ, திராவிடர் கழகம், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றுள்ளன. பாமக, நாதக, தவெக உள்ளிட்ட கட்சிகள் இந்தக் கூட்டத்தை புறக்கணித்துள்ளன.

இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்ற அரசியல் கட்சியின் தலைவர்கள் பேசியதைப் பார்ப்போம்.

இக்கூட்டத்தில் பங்கேற்ற திராவிடக் கழக தலைவர் கி.வீரமணி பேசுகையில், “வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் ஆணையம் செய்ய அரசியலமைப்பு சட்டப்படி அதிகாரம் இல்லை. எஸ்ஐஆரில் ஆபத்தான விஷயங்கள் உள்ளது. இதன்படி பூத் லெவல் அலுவலர்களுக்கு அதிகாரம் அளிக்க சட்ட சம்மதம் கிடையாது. முதல்வர் கூட்டியுள்ள இந்த அனைத்துக் கட்சி கூட்டம் இந்தியாவுக்கே வழிகாட்டியாக உள்ளது. உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தில் எஸ்ஐஆரில் உள்ள அம்சங்கள் குறித்து வழக்கு தொடர வேண்டும்” என்றார்

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேசுகையில், “ எஸ்ஐஆர் பணிக்காக குடியுரிமை சான்றிதழ் கேட்டால் யாராலும் கொடுக்க முடியாது. நவம்பர் 4 முதல் ஒரு மாதத்தில் எஸ்ஐஆர் பணியை முடிக்க சொல்லியுள்ளனர், இது பருவமழை காலம். எப்படி அலுவலர்களால் இதனை செய்யமுடியும். தேர்தல் ஆணையம் செய்வது மோசடியான நடவடிக்கை. தமிழகத்தில் நேரடியாக வெற்றிபெற முடியாது என்பதால், குறுக்கு வழியில் வெற்றிபெற முயற்சி செய்கிறது” என்றார்.

விசிக தலைவர் திருமாவளவன் பேசுகையில், “ இது வாக்குரிமையை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல் அல்ல; குடியுரிமையை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல். குடியுரிமையை உறுதிப்படுத்துவதற்கான ஆதாரத்தையே அவர்கள் கேட்கிறார்கள். 2002ம் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருந்தால் அதனை பொருத்திப் பார்க்க வேண்டும் என்கிறார்கள். மறைமுகமாக தேர்தல் ஆணையத்தை பயன்படுத்தி என்ஆர்சி எனும் குடியுரிமை பதிவேட்டை உருவாக்கவே இந்த வேலையை செய்கிறார்கள்”

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசுகையில், “ ஆட்சி பொறுப்பில் இருந்த கட்சியும், இன்னும் சில கட்சிகளும் இந்த கூட்டத்தை புறக்கணித்திருப்பது வருத்தத்துக்கு உரியது. பிஹாரில் எஸ்ஐஆர் பணி நடந்தபோது அம்மாநிலத்தை சேர்ந்த 6.5 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டன. அவர்களின் பெயரை தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படலாம் என்றும், சென்னையில் மட்டும் பிஹாரை சேர்ந்தவர்கள் 3.5 லட்சம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் எஸ்ஐஆர் பணி நடந்தால் வெளிமாநிலத்தை சேர்ந்த 75 லட்சம் பேர் இங்கே வாக்காளர்களாகும் அபாயம் உருவாகலாம். தமிழகத்தை குறிவைக்கும் பாஜக இத்தகையை நடவடிக்கையை ஏற்க முடியாது” என்றார்

சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பேசுகையில், “ வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் எப்படி மக்களின் உரிமைகளை பறிக்கிறது என்பது குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்” என்றார்

மநீம தலைவர் கமல்ஹாசன் பேசுகையில், “ மக்களாட்சியின் அடித்தளமே வாக்குரிமைதான். தகுதியுள்ள ஒருவரின் பெயர் கூட வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபடக் கூடாது. வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் ஏன் இவ்வளவு அவசரமாக செய்யப்படுகிறது. இந்த அவசரத்தினால் 65 லட்சம் பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு, அவர்கள் வாக்குரிமையை இழந்துள்ளனர்.என்றார்.

தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் மட்டும் எஸ்ஐஆர் பணியை மேற்கொள்வதற்கு வேறு உள்நோக்கம் உள்ளதா?. தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கை குறைந்துவிட்டது. இந்த பணியை நிதானமாக 2026 தேர்தலுக்குப் பின்னர் நடத்த வேண்டும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.