புதுடெல்லி,
தெருநாய்த்தொல்லை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. தெருநாய்த்தொல்லை தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இதுதொடர்பாக தமிழ்நாடு உள்பட அனைத்து மாநில அரசுகளும் பதில் அளிக்க உத்தரவிட்டு இருந்தது. இதற்கிடையே தமிழ்நாடு அரசின் சார்பில் வக்கீல் இந்திரா, சுப்ரீம் கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு முழுவதும் 72 விலங்குகள் காப்பகங்கள் 22 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்த நிதி ஒதுக்கி ஆணையிடப்பட்டு உள்ளது. தெரு நாய்கள் கடிப்பதை கட்டுப்படுத்த 500 கால்நடை மருத்துவர்களுக்கு கருத்தடை பயிற்சி தொடங்கி அளிக்கப்பட்டு வருகிறது.இதுபோல, தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் தெருநாய்களை பிடிக்க 401 பேருக்கு பயிற்சி அளித்துள்ளது.
நாய் உள்ளிட்ட விலங்குகளை இரக்கத்துடன் நடத்துவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த 2,293 கால்நடை நிறுவனங்கள் மாநிலம் முழுவதும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இத்துடன் 577 ஆவின், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக மையங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.கோவை, சென்னை, ஈரோடு, வேலூர், தாம்பரம் ஆகிய மாநகராட்சிகளில் அண்மையில் மேற்கொண்ட கணக்கெடுப்பில் கோவையில் 1 லட்சத்து 16 ஆயிரத்து 434 தெரு நாய்களும், சென்னையில் 1 லட்சத்து 80 ஆயிரத்து 157 தெருநாய்களும், ஈரோட்டில் 34,146 தெரு நாய்களும், வேலூரில் 49,281 தெரு நாய்களும், தாம்பரத்தில் 46,287 தெரு நாய்களும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
1 லட்சத்து 76 ஆயிரத்து 857 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 6 லட்சத்து 20 ஆயிரத்து 794 நாய்களுக்கு கருத்தடை செய்யும் பணி நடந்து வருகிறது.இதுபோல, 2 லட்சத்து 6 ஆயிரத்து 968 நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 5,23,437 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டியுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.