பல்லை பிடுங்கிய வழக்கில் 16 முறையாக ஆஜராகாத பல்வீர்சிங்; பிசிஆர் கோர்ட்டுக்கு மாற்றக் கோரிக்கை

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் துணைக் காவல் கண்காணிப்பாளராக ஐ.பி.எஸ். அதிகாரி பல்வீர்சிங் பணியாற்றிய போது, பல்வேறு வழக்குகளில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்டவர்களின் பற்களை பிடுங்கி கொடூரமாக சித்திரவதை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக, பல்வீர்சிங் மற்றும் அவருடன் பணியாற்றிய ஆய்வாளர் உட்பட 14 போலீஸார்மீது சிபிசிஐடி போலீஸார் நான்கு தனித்தனி வழக்குகளை பதிவு செய்தனர்.

அந்த வழக்கு நெல்லை முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சத்யா முன்னிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக, அந்த வழக்கு 28-வது முறையாக விசாரணைக்கு வந்தது.

பல்லை பிடுங்கிய வழக்கில் ஆஜராகாத பல்வீர்சிங்
பல்லை பிடுங்கிய வழக்கில் ஆஜராகாத பல்வீர்சிங்

இதுவரை நடைபெற்ற 28 விசாரணைகளில், 16-வது முறையாக பல்வீர்சிங் வழக்கின் விசாரணைக்கு ஆஜராகவில்லை. பாதிக்கப்பட்ட பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் தனது தாயாருடன் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

அவர்தரப்பில் ஆஜரான மக்கள் கண்காணிப்பகத்தின் இயக்குநரும் மதுரை கிளையின் வழக்கறிஞருமான ஹென்றி திபேன், பட்டியலின இளைஞரின் வழக்கை மட்டும் தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என நீதிபதியிடம் கோரிக்கை விடுத்தார்.

அப்போது அவர் வாதாடுகையில், “சிபிசிஐடி போலீஸார் பதிவு செய்த நான்கு வழக்குகளில், இந்த தீண்டாமை வன்கொடுமை சட்டப்பிரிவுகளை பயன்படுத்த முடியாது என்பதைக் காட்டுவதற்காகவே சிபிசிஐடி பெரும்பாலும் பட்டியலின மற்றும் பழங்குடியின போலீஸ் அதிகாரிகளையே சேர்த்துள்ளது.

ஆனாலும், அந்த வழக்கில் பட்டியலினத்தைச் சேர்ந்தவரல்லாத குற்றவாளிகளும் உள்ளனர். எனவே, தீண்டாமை வன்கொடுமை சட்டப்பிரிவுகளை பயன்படுத்த முடியும் என்பதைக் குறிப்பிடும் உயர்நிலை விசாரணை அதிகாரி அமுதாவின் இடைக்கால அறிக்கையை, சிபிசிஐடி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வரவில்லை.

பல்லை பிடுங்கிய வழக்கில் ஆஜராகாத பல்வீர்சிங்
பல்லை பிடுங்கிய வழக்கில் ஆஜராகாத பல்வீர்சிங்

அமுதா தனது விசாரணையில், பாதிக்கப்பட்டவர்களின் தாயிடம் ஜி.பே மூலம் லஞ்சம் பெற்றவர் முதல் சித்திரவதையின் போது சிசிடிவி கேமராவை அணைத்தவர் வரை பல போலீஸ் அதிகாரிகளையும், மேலும் பாதிக்கப்பட்டவர்களின் காயங்களைப் புறக்கணித்த அரசு மருத்துவரையும் குறிப்பிட்டிருந்தார். ஆனால், முதல் தகவல் அறிக்கையிலும் குற்றப்பத்திரிகையிலும் இந்த விவரங்கள் இடம்பெறவில்லை,” என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி சத்யா, “வழக்கை மாற்றக் கோரும் மனு ஏன் இவ்வளவு தாமதமாக தாக்கல் செய்யப்படுகிறது? இதுபோன்ற மனுக்களை தாக்கல் செய்வது விசாரணையை மேலும் தாமதப்படுத்தும். இந்த வழக்கை மூன்று மாதங்களுக்குள் முடிக்க நான் திட்டமிட்டிருந்தேன்,” என்று கேள்வி எழுப்பினார்.

பல்லை பிடுங்கிய வழக்கில் ஆஜராகாத பல்வீர்சிங்
பல்லை பிடுங்கிய வழக்கில் ஆஜராகாத பல்வீர்சிங்

அதற்கு பதிலளித்த ஹென்றி திபேன், “நாங்கள் நான்கு வழக்குகளில் ஒன்றை மட்டுமே மாற்றக் கோருகிறோம். மற்ற மூன்று வழக்குகளில் நாங்கள் தலையிடவில்லை. தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி, வழக்கு நடவடிக்கைகளைப் பற்றிய தகவலை அறியும் உரிமை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படவில்லை,” என்றார்.

இதனையடுத்து, வழக்கு விசாரணை வரும் 21-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. பல் பிடுங்கிய வழக்கை தீண்டாமை வன்கொடுமை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் மனு அளிக்கப்பட்டிருப்பது, இவ்வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.