பீகாரில் ஜனசுராஜ் கட்சி தொண்டர் படுகொலை; ஐக்கிய ஜனதாதள வேட்பாளர் நள்ளிரவில் கைது

பாட்னா,

243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கு நவம்பர் 6, 11 ஆகிய நாட்களில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வருகிற 14-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்த நிலையில், ஜனசுராஜ் கட்சியை சேர்ந்த பியூஷ் பிரியதர்ஷி என்பவர் மொகமா தல் தொகுதிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். அவருக்காக வாக்குகள் கோரி பிரசாரத்தில் ஈடுபடும் பணியில் துலார்சந்த் யாதவ் (வயது 75) என்பவர் ஈடுபட்டு உள்ளார். ராஷ்டீரிய ஜனதா தள கட்சியின் முன்னாள் மூத்த தொண்டர் மற்றும் உள்ளூர் தலைவராகவும் இருந்துள்ளார்.

இந்நிலையில், அரசியல் குழுக்கள் இடையே நடந்த மோதலில், அவர் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பற்றிய தீவிர விசாரணை முடிவில், ஆளும் ஐக்கிய ஜனதாதள கட்சியின் வேட்பாளர் ஆனந்த் குமார் சிங் நள்ளிரவில் கைது செய்யப்பட்டு உள்ளார்.

அவருடைய உதவியாளர்கள் மணிகாந்த் தாக்குர் மற்றும் ரஞ்சித் ராம் ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டனர். இதுபற்றி நேற்றிரவு செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய பாட்னா போலீஸ் சூப்பிரெண்டு கார்த்திகேய சர்மா, கொலை வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டு உள்ளது. கைது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. சி.ஐ.டி. குழு விசாரணை மேற்கொண்டு வருகிறது. அரசு நிர்வாகமும், போலீசாரும் முழு அளவில் விசாரணை நடத்தி வருகின்றன என அவர் கூறினார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.