வாஷிங்டன்: அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற டர்னிங் பாயின்ட் யுஎஸ்ஏ நிகழ்ச்சியில் பேசினார். அப்போது, தன்னுடைய மனைவியின் மதப் பின்னணி குறித்த கேள்விக்கு வான்ஸ் கூறும்போது, “என் மனைவி உஷா எப்போதாவது என்னுடன் தேவாலயத்துக்கு வருவார். ஒரு நாள் கத்தோலிக்க திருச்சபையால் மனமாற்றம் அடைந்து கிறிஸ்தவத்தை ஏற்றுக் கொள்வார் என்று நம்புகிறேன்” என்றார்.
இவருடைய இந்த கருத்துக்கு சமூக வலைதளங்களில் சிலர் கடும் எதிர்ப்பும் சிலர் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். “உஷா வான்ஸ் ஒரு இந்து. மத நம்பிக்கையற்றவர் அல்ல. இவர்கள் இந்து வேத முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய ஒரு குழந்தையின் பெயர் விவேக். ஜே.டி.வான்ஸ் போலியானவர்” என ஒருவர் பதிவிட்டுள்ளார். மேலும் சிலர், அவரது மனைவி கிறிஸ்தவ மதத்துக்கு மாறுவார் என தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து, ஜே.டி.வான்ஸ் தனது எக்ஸ் தளத்தில், “என் மனைவி கிறிஸ்தவர் அல்ல. அவரை மதம் மாற்றும் எண்ணமும் இல்லை. எப்படி இருந்தாலும், நான் அவரை நேசிப்பதையும் ஆதரிப்பதையும் மதம், வாழ்க்கை உள்ளிட்டவிஷயங்களைப் பற்றி அவருடன் பேசுவதையும் தொடர் வேன். ஏனெனில் அவர் என் மனைவி” என பதிவிட்டுள்ளார்.