கிருஷ்ணகிரி: அரசம்பட்டி அருகே மூன்றாம் குலோத்துங்கன் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு

கிருஷ்ணகிரி: அரசம்பட்டி அருகே மஞ்சமேடு கிராமத்தில் மூன்றாம் குலோத்துங்கனின் காலத்து வணிக கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், அரசம்பட்டி அருகே உள்ள மஞ்சமேடு கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலர் அண்ணாமலை அளித்த தகவலின்பேரில், கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு மஞ்சமேடு கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டனர். கோட்டீஸ்வர நயினார் என்பவரின் தென்னந்தோப்பில் கிழக்கு நோக்கிய நிலையில் ஒரு கல்வெட்டு படைப்பு சிற்பத்தோடு காணப்பட்டது. இதன் இரு பக்கத்திலும் கல்வெட்டு உள்ளது.

இது குறித்து காப்பாட்சியர் சிவக்குமார் மற்றும் தமிழ்நாடு தொன்மை இயல் ஆய்வு நிறுவனச் செயலாளர் கோவிந்த ராஜ் கூறியதாவது: ”தருமபுரியில் இருந்து ஆந்திரா மாநிலம் பூதலப்பட்டு வரை செல்லும் அதியமான் பெருவழியை ஒட்டிய பகுதிகளில் அண்மைக்காலமாக வணிகக்குழு கல்வெட்டுகள் கிடைத்து வருகின்றன. மஞ்சமேடும் அவ்வழியில் அமைந்துள்ள ஒரு ஊராகும். இங்கு கிடைத்திருப்பது எழுபத்தொன்பது நாட்டார் என்ற வணிகக்குழு கல்வெட்டாகும்.

நிகரிலிசோழ மண்டலத்து கங்க நாட்டு, தகடூர் நாட்டு, எயில் நாட்டு, மேல்கூற்று, பாரூர் பற்றில் உள்ள மஞ்சமாடத்தில் இருக்கும் மஞ்சமாட எம்பெருமான் பெரிய நாட்டுப் பெருமாளுக்கு எழுபத்தொன்பது நாட்டு பெரிய நாட்டார் கூடி தங்கள் ஒவ்வொரு ஊரில் இருந்தும், தலா ஒரு பணம் வீதம் வசூலித்து கொடுத்ததை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது.

இக்கல்வெட்டின் முன்பக்கம் உள்ள கஜ லட்சுமியின் சிற்பம் மிகவும் நுட்பமாக பெரிய மார்பகங்களோடு செதுக்கப் பட்டுள்ளது. வலது பக்க யானை கலசத்தில் இருந்து நீரை ஊற்றுகிறது. இடப்பக்க யானை மலரை துாவுகிறது. அருகே கெண்டி, இணை பாதம், தண்டம், குடை, கத்தி, சேவல், பன்றி, சித்திரமேழி எனப்படும் ஏர்கலப்பை, குத்துவிளக்கு போன்ற வணிக சின்னங்கள் காட்டப்பட்டுள்ளன. இக்கல்வெட்டு மூன்றாம் குலோத்துங்கனின் 22ம் ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்டதாகும்.

எனவே இக்கல்வெட்டு வாயிலாக மஞ்சுமாடம் என்று இன்றைக்கு சரியாக 825 ஆண்டுகளுக்கு முன் அழைக்கப்பட்ட ஊர் தற்போது மஞ்சமேடு என்று அழைக்கப்படுகிறது என்று தெரியவருகிறது. மேலும் தற்போது இங்கிருந்து ஒரு கி.மீ., தொலைவில் உள்ள வாடமங்கலம் பெருமாள் கோவிலைத்தான் இக்கல்வெட்டு மஞ்சுமாட எம்பெருமான் பெரியநாட்டுப் பெருமாள் என்று குறிப்பிடப்படுகிறது” என்று அவர்கள் தெரிவித்தனர். இந்த ஆய்வுப் பணியில், ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.