ஐபிஎல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள ஒரு முக்கிய செய்தியாக, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், அணியில் இருந்து வெளியேற விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில சீசன்களாக அணியின் முகமாக திகழ்ந்த சாம்சனின் இந்த முடிவு, அணி நிர்வாகத்தையும், ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதனையடுத்து, அடுத்த கேப்டனை தேர்வு செய்யும் தீவிர ஆலோசனையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் இறங்கியுள்ளது.
Add Zee News as a Preferred Source

சாம்சனின் விலகலுக்கு என்ன காரணம்?
சஞ்சு சாம்சனின் இந்த திடீர் முடிவுக்கு பின்னால் பல காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக, கடந்த சில சீசன்களாக, அணியின் முக்கிய வீரரான ஜாஸ் பட்லரை தக்கவைக்காதது போன்ற அணி நிர்வாகத்தின் சில முடிவுகளில் சாம்சன் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், காயங்கள் காரணமாக சில போட்டிகளில் அவரால் முழுமையாக பங்களிக்க முடியாததும், அணி ப்ளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற தவறியதும், நிர்வாகத்திற்கும் அவருக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகளை உருவாக்கியதாக தெரிகிறது. இதனால், தன்னை வேறு அணிக்கு டிரேடிங் செய்யுமாறு அல்லது மினி ஏலத்தில் பங்கேற்க அனுமதிக்குமாறு சாம்சன், அணி நிர்வாகத்திடம் அதிகாரப்பூர்வமாகக் கோரிக்கை விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
டெல்லி கேப்பிடல்ஸுடன் டிரேடிங் பேச்சுவார்த்தை
சஞ்சு சாம்சனை தங்கள் அணிக்கு இழுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் ஆர்வம் காட்டிய நிலையில், தற்போது டெல்லி கேப்பிடல்ஸ் அணி இந்த ரேஸில் முன்னணியில் உள்ளது. சாம்சனுக்கு பதிலாக, டெல்லி அணியின் அதிரடி வீரரான டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் ஒரு இளம் வீரரை ராஜஸ்தான் அணிக்கு கொடுக்க டெல்லி அணி முன்வந்துள்ளதாக தெரிகிறது. இந்த டிரேடிங் பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும், விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த கேப்டன் யார்? – ஜெய்ஸ்வால் vs ரியான் பராக்
சாம்சன் வெளியேறும் பட்சத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த ரேஸில், இளம் வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரியான் பராக் ஆகியோரின் பெயர்கள் முன்னணியில் உள்ளன. கடந்த சீசனில் சாம்சன் இல்லாத சில போட்டிகளில், ரியான் பராக் அணியை வழிநடத்தியுள்ளார். மேலும், தனது உள்ளூர் அணியான அசாம் அணிக்கு கேப்டனாக இருந்து, பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு, தனி ஆளாக அணியை வெற்றிக்கு அழைத்து சென்றுள்ளார். இதனால், கேப்டன் பொறுப்புக்கு அவர் ஒரு வலுவான போட்டியாளராக கருதப்படுகிறார்.
மறுபுறம் இந்திய அணியின் இளம் அதிரடி தொடக்க ஆட்டக்காரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால், கடந்த ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றவர். சர்வதேசப் போட்டிகளில் விளையாடிய அனுபவமும், அவரது சீரான ஆட்டமும் அவருக்கு கேப்டன் பொறுப்பை பெற்றுத் தரலாம் எனக் கூறப்படுகிறது. “ஜெய்ஸ்வால் அணியை வழிநடத்தினால் ஆச்சரியப்படுவதற்கில்லை,” என கிரிக்கெட் விமர்சகர் ரோஹித் ஜுக்லான் கூறியுள்ளார். ஐபிஎல் தொடரில் அதிக அனுபவமும், சீரான ஆட்டத்திறனும் கொண்டிருப்பதால், ரியான் பராக்கை விட யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கே கேப்டன் பதவி வழங்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எதுவாக இருந்தாலும், சஞ்சு சாம்சனின் இந்த விலகல், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்துள்ளது என்பது மட்டும் உறுதி.
About the Author
RK Spark