லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் சுபம் மிஸ்ரா என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் ஆன்லைன் மூலமாக தங்கள் நட்பை வளர்த்து வந்துள்ளனர். அப்போது இளைஞர் சுபம் மிஸ்ரா, சிறுமியிடம் பல்வேறு ஆசை வார்த்தைகளை கூறி, அவரை ஒரு ஓட்டலுக்கு வருமாறு அழைத்துள்ளார்.
இதனை நம்பி அந்த சிறுமியும் கிளம்பிச் சென்றார். அவரை சுபம் மிஸ்ரா தனது காரில் ஓட்டலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் ஓட்டல் அறையில் சுபம் மிஸ்ராவின் நண்பர்களான விமல் மற்றும் பியூஷ் ஆகிய இருவர் இருந்துள்ளனர். பின்னர் அவர்கள் 3 பேரும் சேர்ந்து சிறுமியை கட்டாயப்படுத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
அவர்கள் 2 நாட்களாக சிறுமியை ஓட்டல் அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்துள்ளனர். சிறுமியின் உடல் முழுவதும் பற்களால் கடித்து காயங்களை ஏற்படுத்தியுள்ளனர். இதையடுத்து தன்னை விட்டுவிடுமாறு சிறுமி கெஞ்சி கேட்டதை தொடர்ந்து, அவரது வீட்டின் அருகில் சிறுமியை விட்டுச் சென்றுள்ளனர்.
அதே சமயம், சிறுமியின் அந்தரங்க வீடியோவை எடுத்து வைத்துக் கொண்டு, இது குறித்து யாரிடமாவது சொன்னால் வீடியோவை இணையத்தில் பரப்பி விடுவோம் என மிரட்டியுள்ளனர். இருப்பினும் வீட்டிற்குச் சென்ற சிறுமி, தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். அவர்கள் உடனடியாக இது குறித்து போலீசாரிடம் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி பியூஷ் மற்றும் சுபம் மிஸ்ரா ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள விமலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். அதே சமயம், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தேவையான மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.