சென்னை,
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்த வருடம் நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்சை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கோப்பையை கைப்பற்றியது.
இதனையடுத்து 19-வது சீசன் அடுத்த வருடம் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக வீரர்களுக்கான மினி ஏலம் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்குள் இந்த தொடரில் பங்கேற்கும் பத்து அணிகளும் தங்களது அணியிலிருந்து விடுவிக்கப்போகும் வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த சீசனில் (18-வது சீசன்) ஐ.பி.எல். வரலாற்றில் வெற்றிகரமான அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது. ஐ.பி.எல். வரலாற்றில் சென்னை அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடிப்பது இதுவே முதல் முறையாகும்.
இதில் தொடக்க கட்டத்தில் சில போட்டிகளில் ஆடிய சென்னை அணியின் கேப்டனான ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகினார். இதனால் சென்னை அணியின் கேப்டனாக மீண்டும் மகேந்திரசிங் தோனி நியமிக்கப்பட்டார். ஆனால் அவரது தலைமையிலும் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது.
இதனிடையே 44 வயதான தோனி அடுத்த சீசனில் விளையாடுவாரா? இல்லையா? என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது. ஆனால் ஓய்வு குறித்து முடிவெடுப்பதற்கு இன்னும் நிறைய நேரம் உள்ளது என்று கடைசி போட்டியின் முடிவில் தோனி கூறினார். தற்போது அடுத்த சீசன் நெருங்கும் வேளையில் தோனி ஓய்வு குறித்த கேள்விகள் எழத்தொடங்கி உள்ளன.
இந்நிலையில் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ ஆன காசி விஸ்வநாதனிடம் தோனி குறித்து குழந்தைகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த காசி விஸ்வநாதன் தோனி ஓய்வு பெறப் போவதில்லை என்று கூறினார்.
அவர்களுக்கிடையே நடந்த உரையாடல் பின்வருமாறு:-
குழந்தை: அடுத்த ஆண்டு, நீங்கள் ஐபிஎல் கோப்பையை வெல்ல திட்டமிட்டுள்ளீர்களா?
விஸ்வநாதன்: ஆமாம், நாங்கள் தயாராக இருக்கிறோம், ஆனால் நாங்கள் வெல்ல முடியுமா என்று எங்களுக்குத் தெரியாது, ஆனால் நாங்கள் முடிந்தவரை முயற்சிப்போம்.
குழந்தை: தோனி ஓய்வு பெறப் போகிறாரா?
விஸ்வநாதன்: இல்லை, அவர் ஓய்வு பெறப் போவதில்லை.
குழந்தை: தோனி எப்போது ஓய்வு பெறுவார்?
விஸ்வநாதன்: நான் அவரிடம் கேட்டு உங்களிடம் சொல்கிறேன். இவ்வாறு அவர்களுக்கிடையான உரையாடல் அமைந்தது.