புதுச்சேரி,
காரைக்கால் கடற்கரையில் பாலியல் பலாத்காரம், பணம் பறிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெற்று வந்ததை தொடர்ந்து, காரைக்கால் மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் கடற்கரையில் கடலோர போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அதனைத் தொடர்ந்து கடற்கரை பகுதியில் போலீஸ் பூத் அமைக்கப்பட்டதுடன், போலீசார் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர். கடந்த ஆண்டு (2024) செப்டம்பர் மாதம் கடற்கரைக்கு வந்த ஒரு இளம் காதல்ஜோடியை, அப்போதைய ரோந்து பணியில் ஈடுபட்ட போலீஸ்காரர் ராஜ்குமார் (வயது 35) என்பவர் போலீஸ் பூத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்.
அப்போது உடன் வந்த காதலனை, அருகில் கடையில் சென்று தண்ணீர் வாங்கி வருமாறு அனுப்பிவிட்டு, அவரின் காதலியான இளம்பெண்ணை மிரட்டி பணம் கேட்டதாகவும், மேலும் உடலில் கை வைத்து சில்மிஷத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து அந்த இளம்ஜோடி உறவினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து உடனடியாக உறவினர்கள், நண்பர்கள் போலீஸ் பூத்துக்கு வந்து முற்றுகையிட்டனர். அப்போது போலீசாருக்கும் உறவினர்களுக்கும் இடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. இச்சம்பவம் அப்போது சமூக வலைதளங்களில் வைரலானது. சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் ராஜ்குமார் மீது நடவடிக்கை எடுக்குமாறு சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தனர்.
அதனைத்தொடர்ந்து சம்பவம் நடந்த சில வாரங்களுக்கு பிறகு அப்போதைய மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மணீஷ், காதல்ஜோடியை மிரட்டிய போலீஸ்காரர் ராஜ்குமாரை, பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். ஆனால் இதுதொடர்பாக துறை ரீதியான விசாரணை நடைபெற்று வந்தது.
இதன் முடிவில் ராஜ்குமார், இளம்பெணிடம் பணம் கேட்டு மிரட்டியது மற்றும் சில்மிஷத்தில் ஈடுபட்டது உண்மை என்று நிரூபிக்கப்பட்டதால், அவரை நிரந்தரமாக பணிநீக்கம் (டிஸ்மிஸ்) செய்து புதுச்சேரி காவல்துறை தலைமையகம் உத்தரவிட்டுள்ளது.
வேலியே பயிரை மேய்ந்த கதையாக பாதுகாப்பு தரவேண்டிய போலீஸ்காரரே காதலனை விரட்டி விட்டு பெண்ணிடம் சிஷ்மிஷம் செய்த சம்பவத்தால் அவர் வேலை இழந்தது போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.