விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள நடுவப்பட்டி கெங்கையம்மன் கோயிலுக்கு திருமணத்திற்காக சிவலிங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்த கனகராஜ் என்பவர் தனது உறவினர்களுடன் கடந்த 31 ஆம் தேதி இரவு சென்றுள்ளார்.
இந்த நிலையில், திருமணத்திற்கு வந்த உறவினர்களில் ரவிக்குமார் (47) மற்றும் சுரேஷ்குமார் (45) ஆகிய இரண்டு பேரும் அதிகாலையில் கோயிலுக்கு பின்புறம் உள்ள அர்ஜுனா ஆற்றுப் பகுதிக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது.
அதிகாலையில் சென்றவர்கள் மாலை வரை திரும்பி வராததால், உறவினர்கள் அருகிலுள்ள அப்பைநாயக்கன்பட்டி காவல் நிலையத்தில் ரவிக்குமார், சுரேஷ்குமார் ஆகியோரை காணவில்லை எனவும், கண்டுபிடித்து தருமாறு புகார் அளித்து உள்ளனர்.
புகாரின் அடிப்படையில், கடந்த 6 நாட்களாக அப்பையநாயக்கன்பட்டி போலீசார் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி வந்த நிலையில், அர்ஜுனா நதி ஆற்றுப் பகுதியில் உள்ள உறைக் கிணற்றில் துர்நாற்றம் வீசுவதாக தகவல் கிடைத்தது.

அங்கு சென்ற அப்பையநாயக்கன்பட்டி போலீசார் ஜேசிபி உதவியுடன் உறைக் கிணற்றில் இருந்து ரவிக்குமார் மற்றும் சுரேஷ்குமார் ஆகிய இருவரின் உடல்களையும் அழுகிய நிலையில் சடலமாக மீட்டனர். பின், விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
முதல் கட்ட விசாரணையில், சாத்தூர் அருகே உள்ள வேப்பிலைபட்டி கிராமத்தைச் சேர்ந்த சிங்கம் என்பவர் மனைவி தெய்வானை என்பவரின் தோட்டத்தில் பயிர்களை காட்டு விலங்குகளிடமிருந்து பாதுகாக்க அனுமதி இன்றி சட்டவிரோதமாக மின்வேலி அமைத்திருந்தது தெரியவந்துள்ளது.
விசாரணையில், அனுமதியின்றி அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி மின்சாரம் தாக்கி இருவரும் தெய்வானையின் தோட்டத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது.

தெய்வானை தோட்டத்தில் விவசாய பணிகளை மேற்கொண்டு வந்த அவரது மருமகன்கள் சுதாகர் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரும் சேர்ந்து மின்சாரம் தாக்கி பலியான சுரேஷ்குமார் மற்றும் ரவிக்குமார் இருவரின் உடல்களை அப்புறப்படுத்த முயற்சி செய்து, உடல்களை உறைக் கிணற்றில் தூக்கி வீசியதாக கூறப்படுகிறது.
இதனால், சந்தேகத்தின் பேரில் அப்பையநாயக்கன்பட்டி போலீசார் மணிகண்டன் மற்றும் சுதாகர் ஆகிய இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், விவசாய தோட்டங்களில் அனுமதியின்றி மின்சார வேலி அமைத்து விவசாயம் செய்யும் நிலையில், இது போன்ற உயிரிழப்புகள் தொடருவதால் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கூறி, இருவரும் மீட்ட இடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.