ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்புட்லி பகுதியைச் சேர்ந்தவர் அமித் சேரா. இவர் வண்டியில் சென்று காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். ஏழ்மை நிலையில் இருந்த அமித் சேராவுக்கு அதிர்ஷ்டம் பக்கத்திலேயே இருந்தது என்றே சொல்ல வேண்டும். ஆம்! கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் பஞ்சாப் சென்றிருந்தார். அங்கு அம்மாநில அரசு சார்பில் தீபாவளி பண்டிகையையொட்டி லாட்டரியில் ரூ.11 கோடி பம்பர் பரிசு அறிவிக்கப்பட்டு இருந்ததை அறிந்தார்.
ஆனால் லாட்டரி சீட்டு வாங்குவதற்கு தேவையான பணம் கையில் இல்லை. எனவே தனது நண்பரான முகேஷ் என்பவரின் உதவியை நாடினார். அவர் லாட்டரி சீட்டு வாங்குவதற்கான பணத்தை கடனாக கொடுத்து உதவினார்.
இதையடுத்து, அமித் சேரா பாதிண்டா பகுதியில் உள்ள ஒரு கடையில் லாட்டரி சீட்டு வாங்கிக் கொண்டு சொந்த ஊர் திரும்பினார். இந்த நிலையில், கடந்த 31-ந் தேதி பம்பர் லாட்டரி பரிசுக்கான குலுக்கல் நடந்தது. இதில் அமித் சேரா வாங்கிய சீட்டுக்கு ரூ.11 கோடி பரிசு விழுந்தது. இதையறிந்து அவர் இன்ப அதிர்ச்சி அடைந்தார். மகிழ்ச்சியில் துள்ளி குதித்தார். இதுபற்றி அவர் கூறுகையில், ‘இது எனக்கு கடவுன் கொடுத்த எதிர்பாராத ஆசீர்வாதம். இந்த பணத்தை எனது இரண்டு குழந்தைகளின் கல்விக்கு பயன்படுத்துவேன். அதுமட்டுமின்றி இந்த லாட்டரி சீட்டு வாங்க பணம் கொடுத்து உதவிய எனது நண்பர் முகேசுக்கு ரூ.1 கோடி கொடுப்பேன்’ என்று கூறினார்.