கோழிக்கோடு: சபரிமலை தங்கம் திருட்டு விவகாரத்தில் பிரதமர் தலையிடக் கோரி மிகப் பெரிய கையெழுத்து பிரச்சாரத்தை தொடங்கவுள்ளதாக பாஜக பொதுச் செயலாளர் ரமேஷ் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் திருட்டு விவகாரத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையகமான ஏகேஜி மையத்துக்கு தொடர்பு உள்ளது. சபரிமலை கோயிலின் கதவில் இருந்து தங்கம் திருடப்பட்ட விவகாரம் ஒரு நபருடன் மட்டும் தொடர்புடையதாக இருக்க முடியாது எனவும், இதில் சர்வதேச அளவில் முறைகேடு நடைபெற்று இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளதாக கேரள உயர் நீதிமன்றமே தெரிவித்துள்ளது.
இதில் மிகப் பெரிய சதி நடைபெற்றுள்ளது. திருவாங்கூர் தேவசம் வாரிய அதிகாரிகளுக்கு மட்டும் இதில் தொடர்பு இல்லை. அரசு தலையீடும் உள்ளது. மார்க்சிஸ்ட் கட்சியால் நியமிக்கப்பட்ட தேவசம் வாரியத்தின் முன்னாள் ஆணையர் பாதுகாக்கப்படுகிறார். அவரை ஏன் கைது செய்யவில்லை. முக்கிய சதிகாரர்களை பாதுகாக்க, முன்னாள் ஆணையரை கைது செய்வது தவிர்க்கப்படுகிறது.
இந்த விவகாரத்தை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு குழு மாநில அரசின் கீழ் செயல்படுகிறது. எனவே இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். கோயில் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு தலையிட வேண்டும். இதற்காக நாங்கள் ஒரு கோடி பேரிடம் கையெழுத்து பெற்று அதை பிரதமரிடம் சமர்ப்பிப்போம். இவ்வாறு ரமேஷ் தெரிவித்தார்.