புதுடெல்லி: முதல்வர் ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கு தொடர்பான 10 ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களை டிஜிட்டல் வடிவில் இருதரப்புக்கும் வழங்க பதிவாளருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2011-ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் மேயர் சைதை துரைசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அளவுக்கு அதிகமாக தேர்தலுக்கு செலவு செய்ததால் ஸ்டாலி்ன் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும் என கோரியிருந்தார். அந்த வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, விஜய் பிஷ்னோய் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, முதல்வர் மு.க.ஸ்டாலின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், அமித்ஆனந்த் திவாரி ஆகியோர், “இந்த மேல்முறையீட்டு மனு அதிக பக்கங்களைக் கொண்டிருப்பதால் இன்னும் முழுமையாக படித்துப் பார்க்கவில்லை என்பதை நேர்மையாக கூறுகிறோம். எனவே, மனுவை படித்துப் பார்க்க அவகாசம் தேவை என்பதால் விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைக்க வேண்டும்.
மேலும், இந்த வழக்கின் ஆவணங்களை டிஜிட்டல் வடிவில் வழங்க உத்தரவிட வேண்டும்” என கோரினர். சைதை துரைசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் டி.எஸ்.நாயுடு, “மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மேல்முறையீட்டு மனு டிஜிட்டல் வடிவில்தான் உள்ளது” என்றார்.
விசாரணை தள்ளிவைப்பு: அதையடுத்து நீதிபதிகள், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கு தொடர்பான விசாரணை நீதிமன்றத்தின் 10 ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களை டிஜிட்டல் வடிவில் இரு தரப்புக்கும் வழங்க உச்ச நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை டிச.3-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.