BB Tamil 9 Day 32: `அழுகை, அழுகை, அழுகையோ அழுகை'; சாண்ட்ராவின் அலப்பறை; விருந்தினர்களின் கோபம்

சீக்ரெட் டாஸ்க் பற்றி பிக் பாஸ் சொல்லும்போது, இதை சாண்ட்ரா செய்து முடிக்க மாட்டாரோ என்று தோன்றியது. அத்தனை அவநம்பிக்கையாகத் தெரிந்தார். 

ஆனால் களத்தில் இறங்கி ஒற்றை ஆளாக மற்றவர்களைக் கதற விட்டு இந்த டாஸ்க்கை வெற்றிகரமாக முடித்துவிட்டார்கள். அதற்கு சில பல கண்ணீர் துளிகளை பலியாகத் தர வேண்டியிருந்தது.

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? –  நாள் 32

தனக்கு சீக்ரெட் டாஸ்க் தரப்பட்ட சில நிமிடங்களிலேயே அலப்பறையை ஆரம்பித்துவிட்டார் சாண்ட்ரா. “கிச்சன் டிபார்ட்மென்ட்டில் எனக்கு திவாகர் வேண்டாம். சொன்ன வேலை ஒண்ணுகூட செய்யறதில்லை. யாரும் உதவிக்கு வரதில்லை. திவாகரை வெளியே அனுப்புங்க” என்று மேனேஜர் விக்ரமிடம் கதறிக் கொண்டிருந்தார். நல்ல ஃபெர்பாமன்ஸ். 

‘என்னடா.. இது சோதனை’ என்று விக்ரம் போய் திவாகரிடம் சொன்னால் ‘அதெல்லாம் என்னால மாற முடியாது. நான் என்ன தப்பு பண்ணேன்?’ என்று அடம்பிடிக்க விக்ரமிற்கு தோல்வி. 

BB TAMIL 9: DAY 32

நள்ளிரவு 02: 30 மணிக்கு பிரியங்கா மீண்டும் ஹோட்டலுக்கு செக் – இன். (பக்கத்து சூப்பர் சிங்கர் செட்ல இருந்து வர்றதுக்கு இத்தனை பெரிய சூட்கேஸ்லாம் ஓவர் நடிப்பு!) 24x 7 டாஸ்க் என்றாலும் “கிச்சன்ல இப்ப எதுவும் இல்ல. கழுவி ஊத்தியாச்சு’ என்று பிரியங்காவிற்கு உணவு தர மறுத்தார் சாண்ட்ரா. (அப்பத்தான் பிரச்னை பெரிசாகும் என்கிற கணக்குபோல!). 

கிச்சன் ஹெட் சொன்னால் பணியாளர்கள் அதைப் பின்பற்ற வேண்டும். ஆனால் முந்திரிக்கொட்டை மாதிரி முந்திகொண்ட வியானா “மேம். கொஞ்சம் இருங்க.. உங்களுக்கு சுடச்சுட சப்பாத்தி பண்ணித் தரேன்” என்று சொல்லி அடுத்த ஸ்டாரை வாங்குவதற்கான ஆர்வத்தில் இருந்தார். 

சீக்ரெட் டாஸ்க் அலப்பறையை சிறப்பாகச் செய்த சாண்ட்ரா

தனக்கு கீழே பணிபுரியும் ஊழியரே, தன் பேச்சைக் கேட்காத காரணத்தினால் கோபமடைந்த சாண்ட்ரா, “வியானா.. தள்ளுங்க.. நானே பண்றேன். திவாகர் நீங்க வெளியே போங்க” என்று இரண்டு பேரையும் துரத்த, சட்டென்று வியானாவிற்கு கோபம் வந்தது. 

“அவரு மாற மாட்டேங்கறாரு.. அதுவும் இல்லாம.. மேடம். திவாகரை மாத்தச் சொல்லி.. நீங்க சொல்ற ரீசன் வேலிட்-ஆ இல்ல. அதனால முடியாது” என்பதுபோல் விக்ரம் சொல்ல “அப்படின்னா நான் என் வேலையை ரிசைன் பண்றேன்” என்று அதிரடியாக முடிவெடுத்தார் சாண்ட்ரா. 

BB Tamil 9 Day 32
BB Tamil 9 Day 32

நாள் 32. இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே என்கிற பழைய பாட்டினை ரீமிக்ஸ் செய்து அடித்து துவைத்தார்கள். ‘ஒரு தாலாட்டு பாட்டு பாடுங்க’ என்று வினோத்திற்கு ஆர்டர் செய்தார் மஞ்சரி. (ரூம் சர்வீஸில் தாலாட்டு பாடறதெல்லாமா உண்டு?!) லேட்டானதால் கோபித்துக்கொண்டார். என்றாலும் ‘காதோடுதான் நான் பாடுவேன்’ என்கிற பாடலை வினோத் பாடியது அத்தனை இனிமையாக இருந்தது. (திவாகரிடம் மல்லுக்கட்டுவதை விடவும் இந்தத் திறமையை அவர் அதிகம் வெளியேகாட்டலாம்!). 

பணியிலிருந்து ரிசைன் செய்துவிட்டாலும் தான் பயன்படுத்திய பொருட்களை திருப்பித் தர மறுத்து அடம்பிடித்தார் சாண்ட்ரா. “மேடம்.. நீங்க இந்த மாதிரி பண்ணக்கூடாது. திருப்பித் தாங்க” என்று திருட்டுக் கெஞ்சு கெஞ்சினார் பாரு. என்றாலும் சாண்ட்ரா அதற்கு மசியவில்லை. 

பாருவிற்கு அடாவடி பாடம் கற்றுத் தந்த சாண்டரா 

பொறுப்பில் இருக்கும் ஒருவர் சொல்வதை அடாவடியாக மறுத்துப்பேசினால் அந்த எரிச்சல் எப்படியாக இருக்கும் என்பது பாருவிற்கு இப்போது புரிந்திருக்கும். இதிலிருந்தாவது அவர் பாடம் கற்றுக்கொள்வாரா? எப்படியோ சாண்ட்ராவிடம் பாரு பம்மி பம்மி பேசும்போது அத்தனை ஆனந்தமாக இருந்தது. என்றாலும் பாருவிற்குள் இருக்கும் துடுக்குத்தனம் போய் விடுமா என்ன? “பொருட்களையெல்லாம் லவட்டிட்டு போய்டாதீங்க” என்று வாய்விட்டு விட்டார். 

ஹோட்டல் பணியாளர்களை கதறவிட்ட சாண்ட்ரா, தனது டாஸ்க்கின் அடுத்த பகுதியாக கெஸ்ட்களிடம் விளையாடத் தொடங்கிவிட்டார். “நான் யூஸ் பண்ண டவல்தான் உங்களுக்கு கொடுத்திருக்காங்க. அதைக் கொடுங்க” என்று அதிரடியாக பற்ற வைக்க “என்னது..?” என்று அதிர்ச்சியடைந்த பிரியங்கா “ஃபிரெஷ் டவல்தான்னுதானே சொன்னாங்க” என்று ஜெர்க் ஆனார். “டவல் மட்டுமில்ல.. படுக்கையும் நான் யூஸ் பண்ணதுதான்” என்று கூடுதல் ஷாக் தந்தார் சாண்ட்ரா. இவர் இப்படி வீட்டை தாறுமாறாக ஆக்குவதால் திவ்யா அண்ணாச்சி செம ஹாப்பி. (நான் மேனேஜரா இருந்தபோது என்னெல்லாம் பண்ணீங்கடா!)

BB TAMIL 9: DAY 32

மறுபடியும் சாண்ட்ராவிடம் வந்து கெஞ்சவேண்டிய நிலைமை பாருவிற்கு. (ஆஹா!.. ஆனந்தம்!). “கெஸ்ட்டுங்க கிட்ட இப்படியெல்லாம் பேசக்கூடாது” என்று பாரு கெஞ்ச “நான்.. அப்படித்தான் பேசுவேன்” என்று பாரு மாதிரியே அலட்டலாக சாண்ட்ரா நடந்து சென்றது கண்கொள்ளா காட்சி. “மொதல்ல சம்பளத்தைக் கொடுங்க மேடம்.. “ என்று அடம்பிடித்தார் சாண்ட்ரா. 

புதிய மேனேஜர் பதவியில் திண்டாடிய விக்ரம்

“சட்னியில முடி இருக்குது.. அதையா சாப்பிடப் போறீங்க.. அப்புறம் உங்க இஷ்டம்” என்று அடுத்த அதிர்ச்சியை விருந்தினர்களுக்கு தந்தார் சாண்ட்ரா. ‘உவ்வேக்’ என்று வாந்தியெடுக்காத குறை பிரியங்காவிற்கு. ‘டிஸ்கஸ்ட்டிங்’ என்று ஆங்கிலத்தில் வெடித்தார் தீபக். 

சாண்ட்ராவை பெட்ரூமில் தள்ளி பூட்டமுடியுமா என்று பார்த்தார் அமித். முடியவில்லை. ‘தள்ளுய்யா.. வென்று’ என்று தள்ளிக்கொண்டு சென்றார் சாண்ட்ரா. இவர் செய்த அலப்பறையை சரியாகப் பயன்படுத்திக்கொண்ட திவ்யா “கெஸ்ட்டுங்க போனாப் போகட்டும்..ன்னு ஒருத்தர் சொன்னாரு.. அந்த அளவிற்கு சர்வீஸ் இருக்கு” என்று போட்டுக்கொடுக்க “ஆமாம்.. நான்தான் சொன்னேன்” என்று துஷார் கோபத்தில் கத்த ‘மாட்டிக்கினாரு ஒருத்தரு.. காப்பாத்தணும் கர்த்தரு’ என்று சந்தோஷத்தில் துள்ளிக்குதித்தார் திவ்யா. 

BB TAMIL 9: DAY 32

அதென்னமோ திவ்யாவிற்கும் துஷாருக்கும் இடையே வாய்க்கால் தகராறு வந்து விடுகிறது. அரோராவிடம் பெட்டிப் பாம்பாக அடங்கிக் கிடந்த துஷார், இந்த வாரத்தில் திடீரென்று வீறு கொண்டு திவ்யாவிடம் மட்டும் மல்லுக்கட்டுகிறார். 

ஒரு பக்கம் சாண்ட்ராவின் அலப்பறை, சக பணியாளர்களின் பதட்டம், கெஞ்சல், விருந்தினர்களின் கோபம்… என்று வீடு ரகளையாக இருக்க, புது மேனேஜர் விக்ரம் திண்டாடிப் போனார். “இத.. இத.. இதத்தான் நான் எதிர்பார்த்தேன்” என்று திவ்யாவிற்கு ஏக குஷி. 

‘காமெடியனை அழ வெச்சுட்டீங்களே’ – கண்ணீர் விட்டு கதறிய விக்ரம்

சபை கூடியது. ஆர்மி கேம்ப் பாணியில் அனைவரும் கைத்தட்ட “ம்க்கும்..இது ஒண்ணுதான் குறைச்சல். சும்மா இருங்கடா டேய்..” என்று அழாத குறையாக வேண்டினார் விக்ரம். “உங்களால இந்த வீட்டை கன்ட்ரோல் பண்ண முடியுமா.. முடியாதா?” என்று பிக் பாஸ் கறாராக கேட்க “இல்ல.. பாஸ்.. ஒருத்தரும் கேக்க மாட்றாங்க..” என்று பரிதாபமாகச் சொன்னார். 

“அஸிஸ்டெண்ட் மேனேஜர் கெட்ட வார்த்தை பேசினாங்க அவங்களை மாத்தணும்” என்று சாண்ட்ரா புது புகார் சொல்ல “லவட்டிட்டாங்கன்றது கெட்ட வார்த்தை இல்லை” என்றார் பாரு. (இவரிடம் இதைச் சொல்லியிருந்தால் சும்மா இருப்பாரா?!) 

“பாரு.. நீங்க கொஞ்சம் தியாகம் பண்ணுங்க” என்று விக்ரம் கெஞ்ச “அதெல்லாம் முடியாது” என்று பாரு அடம்பிடிக்க “போதும்ப்பா.. போதும்.. என்னால முடியல” என்று இரு கைகளையும் தூக்கிவிட்டார் விக்ரம். “நான் ரிசைன் பண்றேன் பிக்பாஸ். ஊர்ல போய் மாடுகூட மேய்ச்சு பொழச்சுக்கறேன். இவங்களை மேய்க்க முடியாது” என்று கண்கலங்கினார். இந்தச் சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக்கொண்ட திவ்யா “யெஸ்.. அதேதான். இதே வலியோட நானும் கதறினேன்” என்று சரியாக கோல் போட்டார். 

BB TAMIL 9: DAY 32
BB TAMIL 9: DAY 32

விருந்தினர்கள் மதிப்பிட வேண்டிய நேரம். ஆனால் அவர்கள் முழு எரிச்சலில் இருந்தார்கள். “நீங்க யாருமே டீம் எஃபர்ட்டோட ஆடலை. ஒவ்வொருத்தரோட ஈகோதான் பெரிசா இருந்தது” என்று ஸ்டார் தர மறுத்தார்கள். “எப்பேர்பட்ட இடம் இது தெரியுமா..?” என்று தீபக் கண்கலங்கினார். (கொஞ்சம் ஓவர்தான்!). 

“அவங்க சார்பா நான் மன்னிப்பு கேட்டுக்கறேன். நீங்க ரூம்ல ரெஸ்ட் எடுங்க” என்று பிக் பாஸ் மன்னிப்பு கேட்க, விருந்தினர்கள் பதறிப் போனார்கள். 

“விக்ரம்.. உன் வேலையை நீ சரியாத்தான் செஞ்சே” என்று சிலர் ஆறுதலாக சொல்லி அவரையே மறுபடி மேனேஜராக்க முயல  “யப்பா.. போதும்.. நான் வரலை. அடுத்த மேனேஜருக்கு இந்த வலியை தராதீங்க. எல்லாருக்கும் கிரெடிட் வர்றா மாதிரிதான் பண்ணினேன்.. யார் கிரெடிட்டையும் திருடலை. நான் காமெடியன். என்னை இப்படி அழ வெச்சிட்டீங்க.. விக்கல்ஸ்ன்றது நான் கஷ்டப்பட்டு உருவாக்கிய பிராண்ட்” என்றெல்லாம் விக்ரம் சுயபச்சாதாபத்தில் அழுதது பார்க்கவே பரிதாபமாக இருந்தது. 

இந்த வாரம்.. அழுகை வாரம்.. கண்ணீரில் பிக் பாஸ் வீடு

அடுத்த மேனேஜராக சபரியின் பெயரை முன்மொழிந்தார் பாரு. “பிக் பாஸ் சொல்லட்டும்” என்று பிரஜின் ஆட்சேபிக்க இருவருக்கும் முட்டிக்கொண்டது. “இன்னமும் எத்தனை நாளுதான் இவளுக்கு ஜால்ரா அடிக்கப் போறீங்க?” என்று பிரஜின் வார்த்தையைவிட மற்றவர்கள் பொங்கியெழுந்தார்கள். 

ஒரு பக்கம் விக்ரம் அழ, இன்னொரு பக்கம் தீபக் அழ ஒரே கூத்தாக இருந்தது. “கெஸ்ட் சாப்பாடு வேண்டாம்ன்னு சொல்லிட்டாங்க” என்றார் கனி. 

இத்தனை எமோஷனலாக போனாலும் பிக் பாஸ் தன் டிராமாவை நிறுத்தவில்லை. அவருக்கு இதுதானே வேண்டும்?! அடுத்த மேனேஜரை தேர்ந்தெடுக்க வேண்டிய நேரம். ‘யாம் பெற்ற துன்பம்’ என்று சொல்லி சபரியின் பெயரைச் சொன்னார் விக்ரம். மெஜாரிட்டியாக சபரியின் பெயர் வந்தததால் அவரே அடுத்த பலியாடு. மன்னிக்க. அடுத்த மேனேஜர். 

BB TAMIL 9: DAY 32

விக்ரம், தீபக் அழுதது போதாதென்று அமித்தும் அழ ஆரம்பித்தார். டாஸ்க் இப்படி ஆயிற்றே என்று அழுகிறாரா, அல்லது மேனேஜர் ஆக முடியவில்லையே என்று அழுகிறாரா என்று தெரியவில்லை. ஏனெினல் அவருடைய பெயரையும் சிலர் சொல்லியிருந்தார்கள். 

“சபரி.. உங்களுக்குப் பதில் யாரு சிலையா நிப்பாங்க?” என்று பிக் பாஸ் நோண்ட, திவாகரின் பெயரை முன்மொழிந்தார் சபரி. “நான் கிச்சன்ல இருந்து போக மாட்டேன்” என்று வியானா சொல்ல “அப்படின்னா நானும் போகமாட்டேன்.. அங்கேதான் இருப்பேன்” என்று ஒட்டிக் கொண்டார் திவாகர். “இந்த ஹோட்டலை நடத்தணுமா.. வேண்டாமா?” என்று சபரி கேட்க, இந்த முறை அழுவது வியானாவின் டர்ன். “நான் உண்மையா உழைச்சேன்.. ஆனா அவமரியாதைதான் பரிசா கிடைக்குது” என்று அழ அவரைச் சமாதானப்படுத்த வேண்டியிருந்தது. 

“நான் இந்த ஆட்டத்துக்கு வரலை” என்று எரிச்சலுடன் விலகினார் அமித். (சொல்ல மாட்டேன் செய்வேன் என்று சொன்னவரின் நிலைமை!) “நான் கிச்சனை க்ளோஸ் பண்ணேன்.. ஆனா வியானா என் பேச்சைக் கேட்காம சமைக்கறாங்க.. என்னதிது” என்று ஆட்சேபித்தார் சாண்ட்ரா. 

கட்டுப்படுத்தவே முடியாத திவாகரின் நடிப்புத் தாகம்

ஒருவழியாக சிலையாக நிற்க திவாகர் ஒப்புக் கொண்டார். “ஏண்ணே.. இப்பலாம் பாருவை விட்டுட்டு வியானா கூடவே சுத்தறே?” என்று நம் மைண்ட் வாய்ஸை திவாகரிடம் கேட்டார் பிரவீன். 

“அண்ணே.. இப்ப நீங்க.. சிலை யார் கூடயும் பேசக்கூடாது” என்று சபரி சொல்ல “என்னது.. பேசக்கூடாதா.. என்னோட ரீல்ஸ் இல்லாம தமிழக மக்கள் ஏங்கிப் போயிடுவாங்களே.. சாப்பிடக்கூட மாட்டாங்களே.. ஜாப் ஏத்துக்கறதுக்கு முன்னாடி ஒரு ரீல்ஸ் போடறேன்” என்று நடிப்புத் தாகத்தை அடக்க முடியாமல் தவியாக தவித்தார் திவாகர். 

BB TAMIL 9: DAY 32

வீரபாண்டிய கட்டபொம்மனில் ஆரம்பித்து.. தமிழக மக்கள் மீது ஆணை.. சத்தியம்’ என்று சம்பந்தமே சம்பந்தம் இல்லாமல் நடிப்பைக் கொட்டி வழக்கம் போல் இம்சையைக் கூட்டி ரீல்ஸ் போட்டார் திவாகர். (இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு!)

ரிசப்ஷன் டேபிளில் இருந்த ரம்யாவை “இங்க வா.. பேசலாம்” என்ற திவ்யா கூப்பிட “இரு அந்தப் பேய் கிட்ட சொல்லிட்டு வரேன்.. இல்லைன்னா திட்டும் குட்டிச்சாத்தான்’ என்றெல்லாம் பாரு குறித்து ரம்யா சொன்னது ரகளையான கமெண்ட். இதற்கு திவ்யாவும் சாண்ட்ராவும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

பாடகர் மனோ என்ட்ரி – ஸ்டார் பெற்ற சபரி மற்றும் பிரவீன்

வாசலில் பாட்டுச் சத்தம். ‘அய்யோ.. இன்னொரு வைல்ட் கார்டா’.. என்று பார்த்தால் இல்லை. பாடகர் மனோ உள்ளே வந்தார். பிரியங்காவைப் பார்த்ததும்.. “ஹோட்டல்ன்னு போர்டு பார்த்ததும் சாப்பிட வந்துட்டியா?” என்று கிண்டலடித்தார். மனோவின் மகன் நடித்த ‘வட்டக்கானல்’ நடித்த திரைப்படத்தின் புரமோஷனிற்காக வந்திருக்கிறார். இளைஞர்கள் போதைப் பொருள் பயன்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு படமாம் இது. (ஆத்தி!) 

“என்னடா.. ரூம் ஆரம்பிக்கறதுக்குள்ள முடிஞ்சிடுச்சு?” என்கிற வசூல்ராஜா வசனம் மாதிரி ‘வட்டக்கானல்’ டீஸர் ஆரம்பிப்பதற்குள் முடிந்துபோனது. “சின்னதா ஒரு டிரைய்லர் கொண்டு வந்திருக்கேன்’ என்று மனோ சொன்னதின் அர்த்தம் இதுதானா? ‘கர்ணன்’ படத்திலிருந்து ஒரு பாடலைப் பாட வைத்து அதற்கு என்.டி.ராமாராவ் எப்படியெல்லாம் எக்ஸ்பிரஷன் தந்தார் என்பதை செய்து காட்டிய மனோ, அதன் மூலம் திவாகரை ஊமைக்குத்தாக குத்தியது ஜாலியான காட்சி. அப்போதும் அடங்காமல் ‘நான் நடிச்சுக் காட்டட்டுமா?” என்று திவாகர் கேட்க “வேண்டாம்” என்று மனோ சொன்னது சிறப்பு. 

BB TAMIL 9: DAY 32
BB TAMIL 9: DAY 32

“எங்களுக்கு இங்க மறுபடியும் வர்றதுக்கு இஷ்டமேயில்ல. நீங்க ஹோட்டல் நடத்திய லட்சணம் அப்படி இருந்தது. பிக் பாஸ் முகத்திற்காக உட்கார்ந்திருந்தோம். இல்லையென்றால் எப்போதோ கிளம்பியிருப்போம்’ என்ற விருந்தினர்கள், இந்த டாஸ்க்கில் சிறப்பாக பங்கேற்றவர்கள் என்கிற ஸ்டாரை சபரிக்கும் பிரவீனுக்கும் தந்தார்கள். இருவரும் அடுத்த ‘தல’ போட்டியில் பங்கேற்பார்கள். 

சீக்ரெட் டாஸ்க்கில் ஒற்றை ஆளாக கலக்கிய சாண்ட்ராவை பாராட்டலாம் என்றாலும் இந்த கிராஸ் பயரில் சிக்கி கண்ணீர் விட்ட விக்ரம், தீபக் மற்றும் வியானாவை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது. இந்த டாஸ்க் ரகசியம் வெளியே தெரியும் போது இவர்கள் எப்படி ரியாக்ட் செய்வார்கள்?

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.