வாஷிங்டன்,
இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது பரஸ்பர வரி என்ற பெயரில் கடினமான வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விதித்து உள்ளார். இதற்கு எதிரான வழக்கை அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து வருகிறது. ஆனால் டிரம்பின் இந்த நடவடிக்கையை அந்த நாட்டின் வர்த்தக மந்திரி ஹோவார்டு லூட்னிக் நியாயப்படுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ‘நீதியை பெறுவதற்காகவே இந்த வரிகளை ஒரு ராஜதந்திர கருவியாக ஜனாதிபதி டிரம்ப் பயன்படுத்துகிறார். ரஷியா-உக்ரைன் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக இந்த வரிகளை பயன்படுத்துகிறார். அந்தவகையில் ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துமாறு கூறியிருக்கிறார்’ என தெரிவித்தார்.
டிரம்பின் வரிகளுக்கு எதிராக போடப்பட்டுள்ள வழக்கில் வெற்றி பெறுவோம் என நம்பிக்கை தெரிவித்துள்ள லூட்னிக், இந்த அதிகாரம்தான் அமெரிக்காவை பாதுகாக்கும் எனவும் கூறினார்.
அதேநேரம் இந்த அதிகாரத்தை கட்டுப்படுத்தினால், இந்த உலகையும், அமெரிக்காவையும் ஒரு பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு செல்லும் டிரம்பின் திறனை பலவீனப்படுத்தும் என்றும் எச்சரித்தார்.