தங்கம் விலை உயர்வு: திருமணத்தில் தங்க நகைகள் அணிய பெண்களுக்குக் கட்டுப்பாடு; உத்தரகாண்டில் நூதனம்

தங்கம் விலை தொடர்ந்து ஏறிக்கொண்டே இருப்பதால் உத்தரகாண்டில் இரண்டு கிராம மக்கள் தங்க ஆபரணங்களை பெண்கள் பயன்படுத்துவதற்குப் புதிய கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்திருக்கின்றனர். இதே போன்று திருமணத்தில் மதுவுக்கும் சில கிராமத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

டெக்ராடூன் மாவட்டத்தில் யமுனா நதிக்கரையில் அமைந்துள்ள காந்தார் மற்றும் இந்திரானி ஆகிய இரண்டு பஞ்சாயத்தும் சேர்ந்து திருமணத்தில் தங்க நகைகள் பயன்பாட்டிற்குக் கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்திருக்கின்றன. அதன்படி திருமணத்தில் பெண்கள் மூக்குத்தி, கம்மல், தாலிச்செயின் ஆகிய மூன்று நகைகளை மட்டுமே அணிய வேண்டும்.

தங்க நகைகள்
தங்க நகைகள்

இந்த விதிகளை மீறினால் 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

காந்தார் கிராமத்தைச் சேர்ந்த அஜய் சிங் என்பவர் இது குறித்து கூறுகையில், ”தங்கம் விலை அதிகரித்து வருவதால் அதிகமான பெண்கள் தங்கம் வாங்க வேண்டும் என்ற நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இதனால் குடும்பத்தில் தகராறு, நிதி நெருக்கடி போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. எனவே அனைவரும் சமமாக இருக்கவேண்டும் என்பதால் இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது” என்றார்.

இத்திட்டத்திற்குச் சில பெண்கள் ஆதரவு கொடுத்தாலும், மற்ற பெண்கள் இது குறித்து கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.

இது குறித்து அமலா சவுகான் என்ற பெண் கூறுகையில், ”பெண்களுக்கான தங்க ஆபரணங்களுக்கு மட்டும் ஏன் தடை விதிக்கவேண்டும். ஆண்கள் குடிக்கும் விலை அதிகமுள்ள மது வகைகளுக்கும் தடை விதிக்க வேண்டும். தங்கம் ஒரு முதலீடு. கஷ்டமான நேரத்தில் பயன்படுத்திக்கொள்ளலாம். மது மற்றும் தேவையில்லாத செலவுகளால் என்ன பயன்?” என்று கேள்வி எழுப்பினார்.

நிஷா என்ற பெண் இது குறித்து கூறுகையில், ”திருமணத்தை மிகவும் ஆடம்பரமாக நடத்த வேண்டும் என்று நினைப்பதுதான் இதற்கெல்லாம் காரணமாகும். விலை உயர்ந்த மது வகைகள் பயன்படுத்துவதை ஆடம்பர திருமணமாக நினைக்கின்றனர். இதற்கு முன்பு வீட்டில் தயாரித்த மது வகைகளைப் பயன்படுத்தினார்கள். ஆனால் இப்போது பிராண்ட் மது வகைகளைப் பயன்படுத்துகிறார்கள். திருமணத்தில் மது மற்றும் இறைச்சிக்குத் தடை விதிப்பது குறித்தும் பரிசீலிக்க வேண்டும்” என்றார்.

அருகில் உள்ள லோதாரா என்ற கிராமத்தில் ஒரு படி மேலே சென்று திருமணத்தில் மதுவுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. விதிமீறினால் ரூ.51,000 அபராதம் மற்றும் சமூகப் புறக்கணிப்பு செய்யவும் பஞ்சாயத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

GOLD
GOLD

இது குறித்து பஞ்சாயத்து தலைவர் கவிதா கூறுகையில், “எங்கள் கிராமத்தைச் சேர்ந்த யாரும் மதுபானம் பரிமாறப்படும் திருமணத்தில் கலந்து கொள்ள மாட்டார்கள். உள்ளூர் பெண்கள் மற்றும் இளைஞர் குழுக்களுடனான சந்திப்புகளைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது” என்று கூறினார்.

திருமணங்களைத் தங்களது செல்வ செழிப்பை வெளிக்காட்டும் ஒன்றாக அதிகமானோர் நினைக்கின்றனர். புதிய விதிகள் மூலம் மீண்டும் இத்திருமணங்கள் சமூக கொண்டாட்டங்களாக மாறும் என்று அக்கிராமத்தைச் சேர்ந்த அர்ஜூன் சிங் என்ற முதியவர் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.