“தமிழ் இலக்கியம், கலாச்சாரத்தில் சமணத்தின் பங்களிப்பு உள்ளது” – சி.பி.ராதாகிருஷ்ணன்

புதுடெல்லி: தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தில் சமண மதத்தின் வரலாற்று முக்கியத்துவம் சார்ந்த பங்களிப்பு உள்ளதாக குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியில் விஞ்ஞான் பவனில் இன்று நடைபெற்ற சமண மத ஆச்சார்யர் ஹன்ஸ்ரத்னா சூரிஷ்வர்ஜி மகாராஜ்-ன் எட்டாவது 180 உபவாச பர்ண விழாவில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், “உலகின் பழமையான மதங்களில் ஒன்றான சமண மதத்தின் போதனைகளான அஹிம்சை (வன்முறையின்மை), சத்தியம் (உண்மை), அபரிகிரஹா (சொத்துரிமையின்மை), அனேகாந்தவாத (உண்மைக்கான பல்வேறு அணுகுமுறைகள்) ஆகியவை இந்தியாவிலும், உலகம் முழுவதிலும் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் சுதந்திரப் போராட்ட இயக்கத்தில், மகாத்மா காந்தி ஏற்றுக்கொண்ட அஹிம்சை, உலகளவில் அமைதி முறையிலான செயல்பாடுகளை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது. சைவ உணவு, விலங்குகள் மீதான இரக்க குணம், நீடித்த வாழ்வியல் முறை ஆகியவற்றில், சமண மதத்தின் நெறிமுறைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு ஒரு முன்மாதிரியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

25 ஆண்டுகளுக்கு முன்பு நான் காசிக்குச் சென்ற பிறகு சைவ உணவை ஏற்றுக்கொண்டேன். அது பணிவு, முதிர்ச்சி மற்றும் அனைத்து உயிரினங்கள் மீதும் அன்பை வளர்க்க உதவியதை உணர முடிந்தது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, கடந்த ஆண்டு பிராகிருதத்திற்கு ‘செம்மொழி’ அந்தஸ்து வழங்கியது பெருமைக்குரியது. சமண மதத்தின் கையெழுத்துப் பிரதிகளைப் பாதுகாக்க ஞான பாரதம் இயக்கம் மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டுக்குரியவை.

தமிழ்நாட்டில் சமண மதம் பரவிய வரலாறும், தமிழ் கலாச்சாரத்தில் அதன் பரந்த செல்வாக்கும் குறிப்பிடத்தக்கது. சங்க காலத்திலும், அதற்குப் பிந்தைய காலத்திலும், தமிழ் இலக்கியத்திற்கு சமண மதம் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கியுள்ளது. இளங்கோவடிகளின் சிலப்பதிகாரம் இதற்கு ஒரு சிறந்த உதாரணம். சமண இலக்கியங்கள் அகிம்சை, வாய்மை மற்றும் துறவு ஆகியவற்றின் தத்துவ நெறிமுறைகளை பிரதிபலிப்பதாக உள்ளது.

திருக்குறள், சங்க இலக்கியம் போன்ற நூல்கள் சமண மதத்தின் தாக்கங்களைக் கொண்டுள்ளன. வரலாற்று ரீதியாக கற்றல் மையங்களாகச் செயல்பட்ட தமிழ்நாட்டில், பல சமண மடங்கள் உள்ளன.

உண்மையான வலிமை என்பது செல்வத்திலோ அல்லது பதவியிலோ அல்ல. மாறாக கட்டுப்பாடு, கருணை மற்றும் ஒழுக்கம் ஆகிய பண்புகளில்தான் உள்ளது என்பதை ஆச்சாரியர் ஹன்ஸ்ரத்னா சூரிஷ்வர்ஜி மகாராஜ் நிரூபித்துள்ளார். அவரின், “கலாச்சாரம் மற்றும் குடும்பத்தை பாதுகாக்க வேண்டும், தேசத்தைக் கட்டமைக்க வேண்டும்” என்ற பிரச்சாரம் சமூக மாண்புகளை நிலைநிறுத்தவும், குடும்ப அமைப்புக்களை வலுப்படுத்தவும், நெகிழ்வுத்தன்மையுடன் கூடிய நாட்டைக் கட்டமைப்பதற்கு உத்வேகம் அளிப்பதாகவும் உள்ளது” என்று தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.