பிஹார் தேர்தலில் வாக்குப் பதிவு அதிகரிப்பது எதற்கான அறிகுறி? – ஒரு விரைவுப் பார்வை

பிஹாரில் 243 சட்டப்பேரவை தொகுதிகளில் முதல்கட்டமாக 121 தொகுதிகளுக்கு கடந்த 6-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. 1,314 வேட்பாளர்கள் களம் கண்டன இந்தத் தேர்தலில் 65.08 சதவீத வாக்குகள் பதிவானது என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு பிஹார் தேர்தல் களத்தின் ஹாட் டாப்பிக் ஆகியுள்ளது. 2020 பிஹார் சட்டப்பேரவை பொதுத் தேர்தலுடன் ஒப்பிடும்போது தற்போதைய வாக்குப்பதிவு 7.79% அதிகரித்துள்ளது. 2024 மக்களவை பொதுத் தேர்தலுடன் ஒப்பிடும்போது 8.8% அதிகரித்துள்ளது.

பொதுவாகவே வாக்கு சதவீதம் அதிகரித்தால், அது ஆட்சிக்கு எதிரான அதிருப்தி வாக்கு (ஆன்ட்டி இன்கம்பன்சி) என்றே பார்க்கப்படும். ஆனால், பிஹார் தேர்தல் களத்தில் இந்த 65.08% வாக்கு சதவீதத்தை வைத்து ‘எதிர்ப்பு வாக்குகள்’ என்று மகா கட்பந்தன் கூட்டணியும், ‘எலக்ட்ரிக் ஷாக்’ என்று மோடியும், ‘மாற்றத்துக்கான வாக்குகள்’ என்று பிரசாந்த் கிஷோரும் ஆளுக்கொரு ‘வாக்கு கணக்கு தியரியை’ அவிழ்த்துவிட்டுள்ளனர். பிஹார் தேர்தல் களத்தைவிட இந்த தியரிக்கள் சுவாரஸ்யமாக உள்ளன. அது பற்றிய ஒரு சிறு தொகுப்பு.

வாக்குப்பதிவு சதவீதம் அதிகமானால் ஆட்சி மாற்றமா? – பிஹாரில் ஆட்சியில் உள்ள என்டிஏ கூட்டணி இந்த வாக்கு சதவீதம் தங்களுக்கே சாதகம் எனக் கூறிவருகிறது. குறிப்பாக பிரதமர் மோடி சிதாமாரியில் மேற்கொண்ட பிரச்சாரத்தில், “பிஹாரில் காட்டாட்சி வழங்கியவர்களுக்கு 65 வோல்ட் மின் அதிர்ச்சியை (65% வாக்குப்பதிவு நடைபெற்றதை குறிப்பிடுகிறார்) மக்கள் வழங்கி இருக்கிறார்கள். பிஹார் இளைஞர்கள் வளர்ச்சியை தேர்ந்தெடுத்துள்ளார்கள், பிஹாரின் சகோதரிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியைத் தேர்ந்தெடுத்துள்ளார்கள்” என்று முழங்கினார்.

ஆனால், தேர்தல் வரலாற்றுப் பக்கங்களைத் திருப்பிப் பார்த்தால், அதிகமான வாக்கு சதவீதம் சில நேரங்களில் ஆளுங்கட்சிக்கு சாதகமாகவும், சில நேரங்களில் எதிராகவும் இருந்துள்ளதைக் காட்டுகிறது. உதாரணத்துக்கு 2017-ல் உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் 61.2% வாக்குப்பதிவாகியிருந்தது. அதற்கு முந்தைய தேர்தலைவிட 1.84% அதிகம். ஆனால் சமாஜ்வாதி ஆட்சியை இழந்து, பாஜக ஆட்சிக்கு வந்தது.

அதேவேளையில் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் போக்கு பின்னணியை அலசினால், அங்கு மொத்தம் 8 முறை அதிக வாக்குப்பதிவு நடந்துள்ளது. அதில் 1962-ல் மட்டுமே ஆளுங்கட்சி வெற்றி பெற்றது. அதேபோல் வாக்கு சதவீதம் குறைந்தபோது ஆளுங்கட்சி ஆட்சிக்கு வந்த நிகழ்வுகளும் உண்டு. எனவே, வாக்கு சதவீதம் அதிகமாக இருப்பதை நேரடியாக ஆட்சி மாற்றத்துடன் தொடர்புபடுத்த இயலாது.

பிரபலங்களின் கணிப்புகள்: காங்கிரஸ் கட்சியின் உதித் ராஜ், “வாக்கு சதவீதம் அதிகமாகியுள்ளது ஆன்ட்டி இன்கம்பன்ஸியின் அடையாளம். மகாகட்பந்தன் கூட்டணி 3-ல் 2 மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கும்” என்று கூறியுள்ளார்.

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானோ, “தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெறும். அதற்கு சாட்சியே அதிக வாக்குப்பதிவு சதவீதம். ம.பி., குஜராத்தில் அதிக வாக்குப்பதிவு சதவீதம் இருந்தபோதெல்லாம் ஆளுங்கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. டெல்லியில் 3 முறை ஷிலா தீட்சித் முதல்வராக இருக்க இத்தகைய அதிக வாக்குப்பதிவு சதவீதம் காரணமாக இருந்துள்ளது” என்று உதாரணங்களை சுட்டிக்காட்டி கூறியுள்ளார்.

“நாட்டின் அரசியல் வரலாற்றில் பிஹாரில் அதிக வாக்குப்பதிவு நடக்கும் என்று யாரும் கணிக்கவில்லை. பிஹாரில் மாற்றம் நிச்சயமாக வரும் என்பதை முதல்கட்ட தேர்தலில் பதிவான அதிகளவிலான வாக்குப்பதிவு காட்டுகிறது. பிஹாரின் 60%-க்கும் அதிகமான மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். ஒரு மாற்று இல்லை என்ற எண்ணம் மக்களிடம் மாறியுள்ளது.” என்று ஜன் சுராஜ் கட்சியின் தலைவரும், தேர்தல் உத்தி வகுப்பாளருமான பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

அதிக வாக்கு சதவீதம் ஜனநாயகத்தின் வெற்றி. எஸ்ஐஆர் நடவடிக்கையால் வாக்காளர் பட்டியல் சுத்திகரிப்பு செய்யப்பட்டதன் விளைவு என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

எஸ்ஐஆர் காரணமா? – பிஹார் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னரே பிஹார் அரசியலை சூடாக்கியது வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த விவகாரம். எஸ்ஐஆர் அமலானால் வாக்கு சதவீதம் குறையும் என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில் அது பொய்த்துப் போயுள்ளது. ஆனால், அதற்காக 65% வாக்கு ஆட்சி மாற்றத்துக்குத்தான் வழிவகுக்கும் என்று அடித்துச் சொல்லிவிட முடியாது. அப்படியொரு நிலைப்பாட்டை பரிசீலிக்கவே அடுத்த கட்ட தேர்தல் முடிய வேண்டும் என்கின்றனர் அரசியல் நிபுணர்கள்.

தேர்தல் நிபுணர்கள் பிஹார் முதல்கட்டத் தேர்தலில் வாக்குப்பதிவு அதிகரித்தது குறித்து கூறுகையில், “பிஹாரில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதனால், வாக்களிக்க தகுதி பெற்றோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. புதிய வாக்காளர்கள் லட்சக்கணக்கில் சேர்க்கப்பட்டாலும் கூட, இறப்பு, வசிப்பிட மாற்றம் எனப் பல காரணங்களுக்காக வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தால் தகுதியுடைய வாக்காளர்கள் எண்ணிக்கை குறைந்ததால், வாக்குப்பதிவு சதவீத எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வாக்களித்தோர் எண்ணிக்கையில் பெரியளவில் மாற்றமில்லை.

பிஹார் முதல்கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிப்பு குறித்து சி-வோட்டர் நிறுவனர் – இயக்குநர் யஷ்வந்த் தேஷ்முக் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “பிஹார் எஸ்ஐஆர் நடவடிக்கையால் வாக்காளர் பட்டியலில் இருந்து குறைந்தது 10% போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். அதனால் வாக்கு சதவீதம் ரீதியாகவும், எண்ணிக்கை ரீதியாகவும் முதல் கட்ட வாக்குப்பதிவு வரலாறு படைத்துள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.

அதேவேளையில் அரசியல் அறிவியல் ஆசிரியர் ஒருவர், “இந்த எண்ணிக்கை வெறும் புள்ளியியல் கலைத்திறன் தான். மற்றபடி இதனால் பெரிய தாக்கம் ஏதுமில்லை” என்று கூறியுள்ளார்.

பிஹார் பாஜக வட்டாரத்தில், “65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். 21.5 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். மொத்த வாக்காளர்கள் 7.2 கோடி. நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெரும்பாலும் இறந்தவர்கள், போலியானவர்கள் அல்லது புலம்பெயர்ந்தவர்கள். அதனால் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. இதுவே 25 ஆண்டுகளில் இல்லாத சாதனைக்கு வித்திட்டுள்ளது” என்று கூறுகின்றனர்.

இந்தச் சூழ்நிலையில், பிஹார் முதல்கட்ட வாக்குப்பதிவு சதவீத உயர்வை, ஜனநாயக நடைமுறையான தேர்தலில் மக்களின் ஈடுபாடு அதிகரிப்பு என்றும் கொள்ளலாம். இல்லையேல் அரசுக்கு ஆதரவு / எதிர்ப்பு நிலை என்றும் கூறலாம். நவ.14 முடிவே உண்மையைச் சொல்லும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.