வாராணசி: உத்தர பிரதேச மாநிலம் பனாரஸ் ரயில் நிலையத்திலிருந்து 4 புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பனாரஸ்–கஜுராஹோ, லக்னோ–ஷஹாரான்பூர், பிரோஸ்பூர்–டெல்லி, எர்ணாகுளம்–பெங்களூரு ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படும்.
வாராணசியில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியா சர்வதேச அளவில் பொருளாதார வளர்ச்சியில் மிக வேகமாக வளர்ந்து கொண்டு இருக்கிறது. தற்போது, இந்திய ரயில்வேயில் வந்தே பாரத், நமோ பாரத், அம்ரித் பாரத் வகை ரயில்கள் அடுத்த தலைமுறைக்கான ரயில்களாக உருவெடுத்து உள்ளன. நாடு முழுவதும் 160 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக கடந்த 11 ஆண்டுகளில் உத்தரபிரதேசம் புதிய வளர்ச்சிப் பாதையை எட்டி இருக்கிறது.
தற்போது தொடங்கப்பட்டுள்ள புதிய 4 வந்தே பாரத் ரயில்களில் அதிக சொகுசு, வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த ரயில்கள் பொதுமக்களுக்கு அதிக சொகுசு, வசதிகளைத் தரும். இந்த ரயில்கள் நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும். நேரத்தை கணிசமாக குறைக்கும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.