புதுடெல்லி: ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டம் லக்ஷ்மன்கர்கில் உள்ள கபன்வாடா கிராமத்தைச் சேர்ந்தவர் அஜித் சிங் சவுத்ரி. 22 வயதான இவர் ரஷ்யாவின் உபா நகரத்தில் உள்ள பாஷ்கிர் ஸ்டேட் மெடிக்கல் யுனிவர்சிட்டியில் கடந்த 2023-ம் ஆண்டு முதல் எம்பிபிஎஸ் படித்து வருகிறார்.
பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்த இவர் கடந்த அக்டோபர் 19-ம் தேதி காலை 11 மணி அளவில் பால் வாங்குவதற்காக வெளியில் சென்றார். அதன் பின் விடுதிக்கு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த 19 நாட்களாக தீவிரமாக தேடப்பட்டு வந்த அஜித் சிங் வெள்ளை நதிக்கு அருகேயுள்ள அணையிலிருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதனை அவரது நண்பர்கள் உறுதி செய்துள்ளனர். அஜித் உயிரிழந்தது குறித்து அவரது குடும்பத்தாருக்கு ரஷ்யாவில் உள்ள இந்திய தூதரகம் மூலம் முறைப்படி தெரியப்படுத்தியுள்ளனர்.
இறந்த மாணவரின் உடலை இந்தியா கொண்டு வருவதற்கு மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் அல்வார் தெரிவித்துள்ளார்.