ஐபிஎல் 2025 தொடரில் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்து பெரும் ஏமாற்றத்தை அளித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 2026ம் ஆண்டுக்கான மெகா ஏலத்திற்கு முன்பாக அணியை முழுமையாக மாற்றியமைக்க திட்டமிட்டுள்ளது. கடந்த சில சீசன்களை போல இல்லாமல், பார்மில் இல்லாத வீரர்களை நீக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நல்ல பார்மில் இருக்கும் இளம் வீரர்களை தக்கவைத்து, அதேசமயம் ஏலத்திற்கு கணிசமான தொகையை மிச்சப்படுத்தும் வகையில் ஒரு புதிய வியூகத்தை சிஎஸ்கே நிர்வாகம் வகுத்துள்ளது.
Add Zee News as a Preferred Source
தக்கவைக்கப்படும் முக்கிய வீரர்கள்
சிஎஸ்கே அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சிவம் துபேவை அணி நிர்வாகம் தக்கவைத்து கொள்ளும் என தெரிகிறது. அதே சமயம் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவை தக்க வைப்பார்களா அல்லது சஞ்சு சாம்சனுக்காக விட்டுக்கொடுப்பார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ருதுராஜ் கெய்க்வாட் பேட்டிங் மற்றும் கேப்டனாக அணியின் நீண்ட கால முதலீடாக கருதப்படுகிறார். துபே அணிக்கு சமநிலையை தருவதால், அவர் அணியில் இருப்பது அவசியமாகிறது. சமீபத்தில் இந்திய அணியில் முக்கிய நேரத்தில் விக்கெட்களை எடுக்கும் திறனையும் துபே கொண்டுள்ளார்.
வெளிநாட்டு வீரர்களின் நிலை
வெளிநாட்டு வீரர்களை பொறுத்தவரை, இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரன மற்றும் ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் நூர் அஹ்மத் ஆகியோரை தக்கவைப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இவர்களின் வித்தியாசமான பந்துவீச்சு பாணி, விக்கெட்டுகளை வீழ்த்த பெரிதும் உதவும். அதே சமயம் இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா, அதிரடி ஆட்டத்திற்காக டிவால்ட் பிரேவிஸ் மற்றும் ஆயுஷ் மத்ரே ஆகியோரும் அணியின் எதிர்கால முதலீடாக தக்கவைக்கப்படலாம். சமீபத்தில் ஆஸ்திரேலியா தொடரில் கலக்கிய நாதன் எல்லிஸ் தக்க வைக்கப்பட்ட அதிக வாய்ப்புள்ளது.
எம்.எஸ். தோனியின் பங்கு
எம்.எஸ். தோனியைப் பொறுத்தவரை, அவரை வெறும் வீரராக மட்டும் பார்க்காமல், அணியின் மூளையாகவே சிஎஸ்கே நிர்வாகம் கருதுகிறது. அவரது ஆட்ட நுணுக்கங்கள், களத்தடுப்பு வியூகங்கள் மற்றும் விக்கெட் காப்பாளர் திறமை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, ரூபாய் நான்கு கோடிக்கு அவரை தக்கவைத்துக் கொள்ள அணி திட்டமிட்டுள்ளது.
வெளியேற்றப்படும் வீரர்கள்
அணியின் தொடக்க வரிசையை மொத்தமாக மாற்றி சிஎஸ்கே திட்டமிட்டுள்ளதால், நியூசிலாந்து வீரர் டெவோன் கான்வே வெளியேற்றப்பட அதிக வாய்ப்புள்ளது. மேலும் சாம் கர்ரன், ராகுல் திரிபாதி, தீபக் ஹூடா மற்றும் விஜய் சங்கர் ஆகியோரும் கடந்த சீசனில் சிறப்பாக செயல்படாததால், அணியிலிருந்து விடுவிக்கப்படலாம். இவர்களுடன் குர்ஜப்னீத் சிங், ஜேமி ஓவர்டன், ஷ்ரேயஸ் கோபால், ராம்கிருஷ்ணா கோஷ், கமலேஷ் நாகர்கோடி மற்றும் வான்ஷ் பேடி ஆகியோரும் வெளியேற்றப்பட உள்ளனர். ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு பெற்றதால், ஏலத்திற்கு கூடுதலாக ரூபாய் 9.75 கோடி கிடைக்கும்.
ஏலத்திற்கான வியூகம்
மொத்தம் 16 வீரர்களை சுமார் ரூபாய் 89 கோடிக்கு தக்கவைப்பதன் மூலம், சிஎஸ்கே ஏலத்தில் செலவழிக்க சுமார் ரூபாய் 31 கோடி வரை கையிருப்பு வைத்திருக்கும். இந்த தொகையைக் கொண்டு, ஒரு சிறந்த இந்திய தொடக்க வரிசை பேட்டர், ஒரு திறமையான வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளர் மற்றும் ஒரு நீண்ட கால விக்கெட் கீப்பர் – பேட்டரை வாங்க சிஎஸ்கே இலக்கு நிர்ணயித்துள்ளது.
சிஎஸ்கே தக்கவைக்கக்கூடிய வீரர்களின் உத்தேச பட்டியல்
ருதுராஜ் கெய்க்வாட், எம்.எஸ். தோனி, மதீஷ பத்திரன, நூர் அஹ்மத், சிவம் துபே, நேதன் எல்லிஸ், டிவால்ட் பிரேவிஸ், ரச்சின் ரவீந்திரா, ஆயுஷ் மத்ரே, உர்வில் படேல், ஆண்ட்ரே சித்தார்த், கலீல் அகமது, முகேஷ் சவுத்ரி, அன்ஷுல் கம்போஜ், ஷேக் ரஷீத்.
About the Author
RK Spark