நடிகை அனுபமா பரமேஸ்வரன் பெயரில் இன்ஸ்டாகிராமில் போலிக் கணக்கு தொடங்கப்பட்டு, அதில் அவரது புகைப்படங்களை மார்பிங் செய்து சிலர் பதிவிட்டு வருவதாக புகார்கள் எழுந்தன. இந்த விவகாரத்தில் குற்றவாளி யார் என்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அது தமிழ்நாட்டைச் சேர்ந்த 20 வயது பெண் எனவும் அனுபமா தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “சில நாட்களுக்கு முன்பு, என்னைப் பற்றியும், என் குடும்பத்தாரைப் பற்றியும், என் நண்பர்கள் மற்றும் சக நடிகர்களையும் டேக் செய்தும், மிகவும் தவறான மற்றும் பொய்யான தகவல்களை வெளியிட்ட ஒரு இன்ஸ்டாகிராம் பக்கம் இருப்பதை அறிந்தேன்.
அந்த பதிவுகளில் தரக்குறைவாக எடிட் செய்யப்பட்ட புகைப்படங்களையும் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள் இருப்பதையும் பார்த்தேன். இவ்வளவு குறிவைத்து செய்யப்படும் இணையத் தாக்குதலை வருத்தத்தைக் கொடுத்தது.
மேலும் விசாரணையில், அதே நபர் பல போலி கணக்குகளை உருவாக்கி, என்னைச் சார்ந்த ஒவ்வொரு பதிவிலும் பிழையான கருத்துக்களை இடுவதன் மூலம் வெறுப்பை பரப்ப முயன்றது தெரியவந்தது.
இதை அறிந்தவுடன், உடனே கேரள சைபர் குற்றப்பிரிவில் புகார் செய்தேன். அவர்கள் விரைவாகவும் திறம்படவும் செயல்பட்டனர், அவர்களின் உதவியால், இந்தச் செயல்களின் பின்னால் இருந்த நபர் கண்டறியப்பட்டார்.
அந்த நபர் தமிழ்நாட்டைச் சேர்ந்த 20 வயது பெண் என்று தெரியவந்தது. எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
அவளின் வயதைக் கருத்தில்கொண்டும், அவளின் எதிர்காலம் மற்றும் மன அமைதிக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும், அவளின் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் இருக்க விரும்புகிறேன்.
ஆனால், இந்தச் சம்பவத்தைப் பகிர்வதன் மூலம் ஒரு விஷயத்தை தெளிவாகச் சொல்ல நினைக்கிறேன்.

ஒரு ஸ்மார்ட்போன் வைத்திருப்பது அல்லது சமூக ஊடகங்களில் கணக்கு வைத்திருப்பது என்பது யாருக்கும் மற்றவர்களை தொந்தரவு செய்ய, அவதூறு பரப்ப, அல்லது வெறுப்பை விதைக்க உரிமை கொடுப்பதாக ஆகாது.
ஆன்லைனில் செய்யப்படும் ஒவ்வொரு செயலுக்கும் தடயமுண்டு, அதற்கான பொறுப்பை சம்பந்தப்பட்டவர்கள் ஏற்றே ஆக வேண்டும்.
நாங்கள் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். அந்த நபர் தன் செயல்களுக்கு ஏற்ப விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்.
ஒரு நடிகை அல்லது பொதுமக்கள் மத்தியில் அறியப்பட்ட நபராக இருப்பதால் அடிப்படை உரிமைகளை அற்று நிற்க முடியாது. இணைய தாக்குதல் ஒரு தண்டனைக்குரிய குற்றம். சமூகவலைதளங்களில் உங்களின் செயல்பாட்டுக்கான பொறுப்பை நீங்கள் ஏற்றுதான் ஆக வேண்டும்.