Doctor Vikatan: அதிக ரத்த அழுத்தம்தானே ஆபத்து, ரத்த அழுத்தம் குறைந்தாலும் பிரச்னையா?

Doctor Vikatan: பொதுவாக ஒருவருக்கு பிபி  எனப்படும் ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பதைத்தானே ஆபத்தான அறிகுறியாகச் சொல்வோம்.ஆனால், சிலர், குறைந்த ரத்த அழுத்தமும் பிரச்னைக்குரியது என்கிறார்களே. அது உண்மையா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த இதயநோய் சிகிச்சை மருத்துவர் சு.தில்லைவள்ளல்

இதயநோய் சிகிச்சை மருத்துவர் சு.தில்லைவள்ளல்
இதயநோய் சிகிச்சை மருத்துவர் சு.தில்லைவள்ளல்

ரத்த அழுத்தம் பொதுவாக 120/80  இருக்கும். இது 10 சதவிகிதம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கலாம். ரத்த அழுத்தம் 90/60-க்குக் கீழே இருந்தால் அதை நாம் குறைந்த ரத்த அழுத்தம் (Low BP) என்று சொல்கிறோம். ரத்த அழுத்தம் 90/60-க்குக் கீழே குறையும்போது, உடலில் ரத்த ஓட்டம் குறைந்து முக்கியமான உறுப்புகளுக்கு, குறிப்பாக, மூளை, இதயம், சிறுநீரகம், தசைகள் போன்றவற்றுக்கு ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துகள் செல்வது குறைகிறது. இதன் விளைவாக சில அறிகுறிகள் ஏற்படுகின்றன. 

மூளைக்கு ரத்தம் குறையும்போது தலைச்சுற்றல் அல்லது மயக்கம் வரலாம். சில நேரங்களில் நினைவில்லாமல் கீழே விழவும் வாய்ப்புள்ளது. பொதுவாகவே ரத்த அழுத்தம் குறையும்போது சோர்வு மற்றும் பலவீனம் ஏற்படும். கண் பார்வை மங்கலாகத் தெரியும்.

சிலருக்கு மனக் குழப்பமும்  மறதியும் ஏற்படும். தொட்டுப் பார்த்தால் ஜில்லென்று இருக்கும். மற்றும் சிலருக்கு வியர்வை இருக்கும். சில நேரங்களில் மயக்கமாகி கீழே விழுவதும் வாய்ப்பாக இருக்கிறது.

தலைச்சுற்றல் (வெர்ட்டிகோ)
தலைச்சுற்றல்

நீண்ட காலமாகக் குறைந்த ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட சில நோயாளிகளுக்கு, மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் குறைவதால் தீவிரமான பாதிப்புகள் ஏற்படலாம். இதயத்திற்கு ரத்தம் குறைவதால், இதயத்துடிப்பு சீரற்றதாகவும் அசாதாரணமானதாகவும் மாறலாம்.

இதன் காரணமாக அவர்களுக்கு மார்பில் வலி, படபடப்பு மற்றும் மூச்சு வாங்குதல் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். சிறுநீரகத்தின் செயல்பாடு குறையும். ரத்தம் வடிகட்டப்படுவது குறைவதால், சிறுநீரில் அசுத்தமான பொருள்கள் வெளியேறுவது குறையும்.

ரத்தத்தில் யூரியா அளவு அதிகரிக்கலாம், உடலில் தண்ணீர் தேங்கி, வீக்கங்கள் ஏற்படலாம். சில நேரங்களில், ரத்தம் அழுத்தம் அதிகமாகக் குறைந்து தொடர்ந்து நீடித்தால், ஷாக் (Shock) என்று சொல்லக்கூடிய உயிருக்கு ஆபத்தான நிலையும் ஏற்படலாம். இது மிகவும் குறைந்த ரத்த அழுத்தத்தால் ஏற்படுகிறது.

சிலருக்கு இயற்கையாகவே குறைந்த ரத்த அழுத்தம் இருக்கும். குறிப்பாக, ஒல்லியாக இருக்கும் பெண்களுக்கும்,  வயதானவர்களுக்கும்  இப்படி இருக்கலாம்.

இந்த மாதிரி இயற்கையாகவே ரத்த அழுத்தம் சற்று குறைந்த நிலையில் இருந்து, அவர்களுக்கு நீரிழப்பு இல்லாமல், வேறு பிரச்னைகளோ அல்லது வேறு நோய்களோ இல்லாமல் இருந்தால், அவர்கள் மற்றவர்களை விட அதிக ஆண்டுகள் வாழ வாய்ப்பு அதிகம்.

ரத்த அழுத்தம் குறைவதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானது சரியாகத் தண்ணீர் குடிக்காமல் இருப்பது.  வாந்தி, பேதி அல்லது அதிக அளவில் வியர்வை வெளியேறுதல் போன்றவற்றால் உடலில் தண்ணீர்ச்சத்து குறையும்போது நீரிழப்பு  ஏற்படும்.

நீரிழப்பு

நீண்ட நேரம் பசியுடன் சாப்பிடாமல் இருந்தாலும் ரத்த அழுத்தம் குறையலாம். அதிக ரத்த அழுத்தத்தைக் குறைக்க உட்கொள்ளும் மருந்துகளின் (உதாரணமாக, பீட்டா-பிளாக்கர்கள் அல்லது டையூரிடிக்ஸ், ஆல்ஃபா பிளாக்கர்கள்) தாக்கம் அதிகமாக இருக்கும்போதும் ரத்த அழுத்தம் குறையலாம்.

மனச்சோர்வுக்கான மருந்துகளும் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் விளைவைக் கொண்டிருக்கலாம். மாரடைப்பு ஏற்பட்டால், இதயத்துடிப்பு சீரற்று மாறினால் அல்லது இதயச் செயலிழப்பு  அதாவது, இதயம் ரத்தத்தை பம்ப் செய்யும் திறன்  குறைவதாலும் ரத்த அழுத்தம் குறையலாம்.

இது போன்ற நிலையில் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிப்பது மிகவும் முக்கியம். தைராய்டு சுரப்புக் குறைவு (Hypothyroidism) போன்ற அல்லது அட்ரீனல் சுரப்பியின் செயல்பாட்டுக் குறைவு போன்ற ஹார்மோன் குறைபாடுகளாலும் ரத்த அழுத்தம் குறைய வாய்ப்பு அதிகம்.

விபத்துகளில் ரத்தம் அதிகமாக வெளியேறுவது திடீர் ரத்த இழப்புக்கு  மிக முக்கியமான காரணம். விபத்து ஏற்பட்ட முதல் ஒரு மணி நேரம் Golden Hour என்று அழைக்கப்படுகிறது. இந்த முதல் ஒரு மணி நேரத்திற்குள் மருத்துவமனையில் அனுமதித்து, ரத்த அழுத்தத்தை, ஆக்ஸிஜன் அளவைச் சரிபார்த்து, உடனடியாகச் சரிசெய்தால், 95 சதவிகிதம் உயிரைக் காப்பாற்ற வாய்ப்பு அதிகம்.

அறுவை சிகிச்சையின்போது ரத்தம் இழப்பு ஏற்பட்டால், அதற்கான ரத்த மாற்று (Blood Transfusion) செய்து உடனடியாகச் சரிசெய்ய முடியும். ஆபத்தான கிருமித்தொற்று  அதிகரித்து, செப்சிஸ் அல்லது செப்டிக் ஷாக் என்று சொல்லக்கூடிய நிலை ஏற்படும்போதும் ரத்த அழுத்தம் அபாயகரமாகக் குறையலாம். செப்டிக் ஷாக்கிற்கு உடனடியாக உள்நோயாளியாக  அனுமதித்துச் சிகிச்சை அளிக்க வேண்டும். 

  மருந்துகள் கொடுத்து, ரத்த அழுத்தத்தை உடனடியாகச் சாதாரண நிலைக்குக் கொண்டு வர வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் இதயம், மூளை, குறிப்பாக.. சிறுநீரகம் ஆகியவற்றில் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்கலாம்.

ரத்தம்

குறைந்த ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த, மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் உள்ளன. பொதுவாக, ஒரு நாளைக்கு இரண்டே முக்கால் முதல் மூன்று லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும்.

நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்; வெறும் வயிறாக அதிக நேரம் இருப்பதைத் தவிர்க்கவும். பலவீனமாக இருப்பவர்கள், நீரிழப்பு உள்ளவர்கள் அல்லது வயதானவர்கள் திடீரென எழுவதைத் தவிர்க்க வேண்டும். 

படுத்து எழுந்தவுடன், மெதுவாக உட்கார்ந்து 30 முதல் 40 நொடிகள் இருக்கவும். பிறகு நின்று 20 நொடிகள் கழித்து நடக்கவும். இரவு தூக்கத்தில் BP குறைவாக இருக்கும். திடீரென எழுவது மேலும் குறையச் செய்து மயக்கம் வர வாய்ப்புள்ளது. ரத்த அழுத்தம் தொடர்ந்து குறைவாக இருந்தால், உடனடியாக உங்கள் குடும்ப மருத்துவரைச் சந்தித்து ஆலோசிக்கவும்.

சரியான காரணத்தைக் கண்டறிந்து, அதற்கேற்ற சரியான சிகிச்சையை எடுக்கவும். இன்றைய மருத்துவ முன்னேற்றத்தில் குறைந்த ரத்த அழுத்தம் மற்றும் அதிக ரத்த அழுத்தம் ஆகியவற்றைச் சரிசெய்ய நல்ல மருந்துகள் உள்ளன. 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.