வாஷிங்டன்,
அமெரிக்காவில் டிரம்ப் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு குடியேற்ற கொள்கை, பிற நாடுகள் மீது வரி விதிப்பு உள்ளிட்ட பல்வேறு அதிரடி மாற்றங்களை அறிவித்து வருகிறார். அவரது இந்த நடவடிக்கைக்கு உள்நாட்டிலேயே எதிர்ப்புகள் கிளம்பின. எனவே நாடாளுமன்றத்தில் அவர் கொண்டு வரும் மசோதாக்களுக்கு எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அடுத்த ஆண்டுக்கான நிதியை விடுவிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. அரசு துறைகளுக்கான நிதி விடுவிக்கப்படாததால் அனைத்து துறைகளும் முடங்கின. குறிப்பாக ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே அத்தியாவசிய துறையில் பணிபுரியும் 7 லட்சம் பேர் ஒரு மாதமாக சம்பளம் இன்றி வேலை பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
மேலும் 6.5 லட்சம் பேர் கட்டாய விடுப்பில் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் சுமார் 50 சதவீதம் அளவுக்கு ஊழியர் பற்றாக்குறை நிலவுகிறது. இதன் காரணமாக அமெரிக்காவில் உள்ள 40 முக்கிய விமான நிலையங்களில் கடந்த 3 நாட்களாக விமான சேவைகள் முடங்கியுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை சுமார் 1,000 விமான சேவைகளும், நேற்று முன்தினம்(சனிக்கிழமை) 1,500 விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.
இதன் உச்சகட்டமாக நேற்று(ஞாயிற்றுக்கிழமை) ஒரே நாளில் 40 விமான நிலையங்களில் 2,000-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சுமார் 7,000 விமானங்கள் சேவைகளில் தாமதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.