டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
டெல்லி செங்கோட்டை அருகே அமைந்துள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவாயில் பகுதியில் சாலையில் கார் ஒன்று திடீரென வெடித்து தீப்பிடித்து எரிந்தது. இந்த வெடிப்புச் சம்பவத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது விபத்தா அல்லது சதிச் செயலா என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து உடனடியாக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கம், பிஹார், மத்தியப் பிரதேசம்,ஹரியானா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் உஷார் நிலை பலப்படுத்தப்பட்டுள்ளது. மும்பை, ஹைதராபாத், சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் போலீஸார் தீவிர வாகன சோதனைகளில் ஈடுபட்டுள்ளனர். அதே போல தமிழகத்தின் சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் ரயில் நிலையங்களிலும் போலீஸார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
டெல்லியில் சம்பவம் நடந்த இடத்தைச் சுற்றி டெல்லி காவல்துறை, மற்றும் தேசிய பாதுகாப்புப் படை அதிகாரிகள் முகாமிட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். டெல்லி மெட்ரோ நிலையங்கள், செங்கோட்டை, முக்கிய அரசு கட்டிடங்கள் மற்றும் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் ஆகியவை போலீசாரின் பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.
ஹரியானாவில், அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் பாதுகாப்பு பணிகள் தொடர்பான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. டெல்லி எல்லையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் சிறப்பு கண்காணிப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நெரிசலான இடங்கள் மற்றும் சுற்றுலா தளங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஹரியானா முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது.