பாட்னா: தேர்தல் பிரச்சாரம் அமைதியாக முடிவடைந்ததைத் தொடர்ந்து, பிஹாரில் வலுவான அரசாங்கத்தை தேசிய ஜனநாயக கூட்டணி அமைக்கும் என மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சித் (ராம் விலாஸ்) தலைவருமான சிராக் பாஸ்வான் நம்பிக்கை தெரிவித்தார்.
பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய சிராக் பாஸ்வான், “பிஹாரில் தேர்தல் பிரச்சாரம் மிகவும் அமைதியான முறையில் முடிவடைந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஒவ்வொருவரும் தங்கள் முழு முயற்சியையும் கடின உழைப்பையும் செலுத்தி, தங்கள் செய்திகளை பொதுமக்களிடம் கொண்டு சென்றனர். பிஹார் மக்களின் மனதில் இரட்டை இன்ஜின் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை உள்ளது. நாங்கள் பிஹாரில் ஒரு வலுவான அரசாங்கத்தை உருவாக்கப் போகிறோம் என்று நான் நம்புகிறேன்.” என சிராக் பாஸ்வான் கூறினார்.
தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களின் பிரச்சாரத்தில் மகா கூட்டணி காட்டாட்சியை நிறுவ முயற்சிப்பதாகவும், தேசிய ஜனநாயக கூட்டணி வளர்ச்சியை முன்வைப்பதாகவும் தெரிவித்தனர்.
பிஹாரில் நாளை (நவம்பர் 11) இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரச்சாரம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலையுடன் நிறைவுபெற்றது. பிஹார் முதல் கட்ட தேர்தல் நவம்பர் 6 அன்று நடைபெற்றது, அப்போது 65.08 சதவீத வாக்குகள் பதிவாகின. இது பிஹார் வரலாற்றில் மிக அதிகமான வாக்குப்பதிவு சதவீதமாகும். பிஹார் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் நவம்பர் 14 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளன.