50 தொகுதி லட்சியம்… 40 தொகுதி நிச்சயம்! – அதிமுகவை  அதிரவிடும் பாஜக?

தமிழகத்தில் சிறப்பு தீவர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடங்கியிருக்கும் நிலையில், சட்டப்பேரவை தேர்தலுக்கான முதற்கட்ட பணிகளையும் அரசியல் கட்சிகள் ஆரம்பித்துவிட்டன. பிரதான எதிர்க்கட்சி கூட்டணியில், அதிமுகவிடம் பாஜக 50 தொகுதிகள் கேட்டு அழுத்தம் கொடுப்பதாக வரும் தகவல்கள் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலில் முதன்மை போட்டி திமுக – அதிமுக கூட்டணி இடையில்தான் என்பதே கள எதார்த்தம். இதில் திமுக கூட்டணி முழு வலிமையோடு நிற்கிறது. அதற்கு ஈடு கொடுக்கும் வகையிலான கூட்டணியை அமைக்க அதிமுக அத்தனை முயற்சிகளையும் எடுத்து வருகிறது. அதிமுக கூட்டணியில் தற்போது பாஜக, தமாகா கட்சிகள் மட்டுமே இருந்தாலும், அன்புமணி பாமக, தேமுதிக மற்றும் இன்னும் சில சிறிய கட்சிகள் கூட்டணியில் இணைவது கிட்டத்திட்ட உறுதியாகியுள்ளது.

அதிமுக கூட்டணியில் தற்போது நேரடியாகவும், மறைமுகமாகவும் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளன. கடந்த மாதம் பாஜகவின் தேர்தல் பொறுப்பாளர் பைஜெயந்த் பாண்டா, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என சொல்லப்பட்டாலும், தொகுதி பங்கீடு பற்றிய ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

தொடர்ந்து நடந்துவரும் பேச்சுவார்த்தைகளில் பாஜக 60 தொகுதிகளை கேட்டு அதிமுகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறது. ‘கடந்த முறை கொடுத்த 20 தொகுதிகளை மீண்டும் தருகிறோம்’ என அதிமுக தரப்பில் கூறிய நிலையில், 2024 மக்களவைத் தேர்தல் முடிவுகளை காட்டி கூடுதல் தொகுதிகளை கேட்கிறதாம் பாஜக.

மக்களவைத் தேர்தலில் கோவை, நீலகிரி, மதுரை, நெல்லை, கன்னியாகுமரி, திருவள்ளூர், தென்சென்னை, மத்திய சென்னை, வேலூர் ஆகிய 9 தொகுதிகளில் பாஜக இரண்டாம் இடம் பிடித்தது. 2021 தேர்தலுடன் ஒப்பிடுகையில் பாஜகவின் வாக்கு வங்கி மூன்று மடங்கு அதிகரித்துள்ளதால், அப்போது கொடுக்கப்பட்ட 20 தொகுதிகளில் இருந்து மும்மடங்காக, அதாவது 60 தொகுதிகளை கேட்கிறது தாமரைக் கட்சி.

இது மட்டுமின்றி, தங்களுக்கு சாதகமான தொகுதிகளின் பட்டியலையும் அதிமுகவிடம் சமர்ப்பித்துள்ளதாம் பாஜக. அதில், மாவட்டத்துக்கு ஒரு தொகுதிகள் வேண்டும் என்றும், மக்களவைத் தேர்தலில் இரண்டாம் இடம் பிடித்த தொகுதிகளில் தலா இரு தொகுதிகள் வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளதாம்.

இதுமட்டுமின்றி, ஸ்ரீரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர், நெல்லை, பழநி போன்ற முக்கிய கோயில்கள் இடம்பெறும் 10-க்கும் மேற்பட்ட தொகுதிகளையும் கேட்டு பாஜக கொடுத்த லிஸ்டால் பதறிப்போயிருக்கிறது அதிமுக. பாஜக கேட்கும் 10 தொகுதிகள் யாவும் அதிமுகவின் மூத்த தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகள் என்பதுதான் இதில் ஹைலைட்.

சில மாதங்களுக்கு முன்பு மதுரை வந்த அமித் ஷா, 50 தொகுதிகளை குறிவைத்து வேலை செய்யுங்கள் என பிறப்பித்த உத்தரவை வேதவாக்காக கொண்டு செயல்பட்டு வருகின்றனர் பாஜகவினர். இதன் தொடர்ச்சியாக வெற்றி வாய்ப்புள்ள 60 தொகுதிகள், அதற்கான வேட்பாளர்கள், கள ஆய்வு என எல்லாவற்றையும் முடித்து வைத்துள்ளது பாஜக.

பாஜகவின் 50 தொகுதிகள் கோரிக்கை வழக்கமானதுதான் என முதலில் நினைத்தது அதிமுக. ஆனால் விடாபிடியாக ‘ஐம்பதை’ பற்றிக்கொண்டே பாஜக நிற்பது அதிமுகவுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. எனவே, அதிமுகவும் சில ‘டேட்டா’க்களை பாஜகவிடம் கொடுத்துள்ளது. அதன்படி அதிகபட்சமாக 25 தொகுதிகள் கொடுக்கலாம் என சொல்லியுள்ளது.

இதற்கு முக்கிய காரணமாக அதிமுக சுட்டிக்காட்டுவது பாமகவை. கடந்தமுறை பாமகவுக்கு 23 தொகுதிகள் கொடுக்கப்பட்டது. இம்முறை அவர்கள் குறைந்தது 25 தொகுதிகள் கேட்பார்கள். மேலும், தேமுதிக 10 முதல் 15 தொகுதிகளாவது எதிர்பார்க்கும். இது மட்டுமின்றி, தமாகா மற்றும் சிறிய கட்சிகளுக்கு 15 தொகுதிகள் வரை ஒதுக்க வேண்டியிருக்கும். 234 தொகுதிகளில், கூட்டணி கட்சிகளுக்கு சுமார் 80 தொகுதிகள் ஒதுக்கினால், மீதமுள்ள 150+ தொகுதிகளில் மட்டுமே அதிமுகவால் போட்டியிட முடியும்.

கடந்த முறை அதிமுக 179 தொகுதிகளில் போட்டியிட்டது. கிட்டத்திட்ட அதே அளவு தொகுதிகளில் களமிறங்குவதே திமுகவுக்கு கடும் போட்டியை கொடுக்கும் என பாஜகவிடம் உறுதியாக சொல்லியுள்ளது அதிமுக.

அதிமுக என்னதான் சொன்னாலும், ‘50 தொகுதிகள் லட்சியம்… 40 தொகுதிகள் நிச்சயம்’ என ஒரே பேச்சாக இருக்கிறது பாஜக. அதிமுக எப்படி சமாளிக்கப் போகிறதென்று பார்ப்போம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.