2021-ல் மாநிலத் தலைவரான பின்னர் தமிழகத்தில் எப்போதும் பாஜகவை லைம்லைட்டில் வைத்திருந்தார் அண்ணாமலை. நயினார் நாகேந்திரன் தலைவரான பின்னர் பாஜக சுணக்கமாகி விட்டதாக ஒரு தரப்பு பேச ஆரம்பித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அண்ணாமலை – நயினார் நாகேந்திரனின் செயல்பாடுகளை ஒப்பிட்டு எழுந்துள்ள பிரளயம்தான் பாஜகவில் இப்போது ஹாட் டாபிக்.
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை, பாஜகவின் மாநிலத் தலைவரான பின்னர் தமிழகத்தில் தினம் தினமும் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றபடி இருந்தார். தடாலடி பேச்சுகள், திமுக மீதான கடும் எதிர்ப்பு ஆகியவை இவருக்கு தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியது. அண்ணாமலையின் அதிரடியால் பாஜகவில் புதியவர்கள் அதிகம் இணைந்தார்கள் என அவரின் ஆதரவாளர்கள் புள்ளிவிவரங்களையும் அடுக்கினர்.
அண்ணாமலையின் பேச்சினால் ஒரு பக்கம் பாஜகவுக்கு ஆதரவு வளர்ந்தாலும், அவரின் பேச்சு பல எதிரிகளையும் சம்பாதித்தது. அண்ணாமலை தனது தடாலடி பேச்சால் தொடர்ந்து அதிமுகவையும், அதன் முன்னாள், இன்னாள் தலைவர்களையும் சீண்டியபடியே இருந்தார். பொறுத்து பொறுத்து பார்த்த எடப்பாடி பழனிசாமி, மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக பாஜக கூட்டணிக்கு முழுக்கு போட்டுவிட்டு வெளியேறினார்.
கூட்டணியிலிருந்து அதிமுக வெளியேறியபோதே, மத்திய பாஜக தலைமை அண்ணாமலையிடம் விசாரித்தது. அப்போது அவர், ‘அதிமுக போனால் என்ன, பாஜக கூட்டணி மக்களவைத் தேர்தலில் இரட்டை இலக்கத்தில் வெற்றி பெறும்’ என உறுதி கூறியதாக பாஜக வட்டாரங்கள் சொல்கின்றன. இதனை நம்பிய மத்திய தலைமை அவரின் பேச்சை கேட்டது. ஆனால், தேர்தல் ரிசல்ட் பூஜ்ஜியமானதால் அண்ணாமலைக்கு கட்டம் கட்டப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அதிமுகவோடு பேசி கூட்டணியை இறுதி செய்தார் அமித் ஷா. அதோடு மட்டுமின்றி இபிஎஸ்சின் ‘டிமாண்ட்’ அடிப்படையிலேயே அண்ணாமலை பதவியிலிருந்து நீக்கப்பட்டார் என்றும் சொல்லப்படுகிறது. இதன் பின்னர்தான் அதிமுகவோடு எப்போதும் இணக்கமாக இருக்கும் நயினார் நாகேந்திரனை மாநிலத் தலைவராக்கியது பாஜக.
குடைச்சல் கொடுக்கிறாரா அண்ணாமலை? – நயினார் நாகேந்திரன் தலைவராக இருந்தாலும், யாருக்கும் கட்டுப்படாமல் அண்ணாமலை தனி ஆவர்த்தனம் இப்போதும் செய்து வருகிறார் என்ற குமுறலும் பாஜகவில் உள்ளது. அவ்வப்போது தானாகவே சில அறிவிப்புகளை வெளியிட்டும் அதிர்ச்சிக்குள்ளாக்குவார் அவர். சமீபத்தில் அண்ணாமலைக்கு சேலத்தில் ரசிகர் மன்றம் ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டது. அதேபோல அண்ணாமலை நற்பணி மன்றத்துக்கான கொடியும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது, ஆனால் அதற்கு உடனடியாகவே தடை போட்டார் அண்ணாமலை.
இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், அண்ணமலைக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கப்பட்ட இடம், இபிஎஸ்சின் சொந்த மாவட்டமான சேலம். நற்பணி மன்ற கொடி அறிமுகப்படுத்தப்பட்ட இடம் நயினாரின் சொந்த மாவட்டமான நெல்லை.
இந்த சூழலில்தான், நயினார் நாகேந்திரனின் செயல்பாடுகளில் மத்திய பாஜக தலைமை திருப்தியில்லாமல் இருப்பதாக சொல்லப்படுகிறது. அண்ணாமலை இருந்தபோது பாஜக எப்போதும் லைம்லைட்டில் இருந்ததாகவும், நயினாரின் வருகைக்குப் பின்னர் கட்சி இருக்கும் இடமே தெரியவில்லை என்றும் பேச்சுக்கள் எழுந்துள்ளது. அண்ணாமலையின் செயல்பாடுகளால் ஏற்பட்ட தாக்கம் காரணமாகவே, மக்களவைத் தேர்தலில் பாஜக வாக்கு சதவீதம் உயர்ந்ததாகவும் மேலிடத்துக்கு ஒரு தரப்பு ரிப்போர்ட் அனுப்பியுள்ளது.
இதனையடுத்து, நயினார் நாகேந்திரனை வைத்தே சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ளலாமா அல்லது மீண்டும் அண்ணாமலையை பொறுப்புக்கு கொண்டுவரலாமா என்ற ஆலோசனையிலும் மத்திய தலைமை ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
அண்ணாமலை தடாலடியாக பேசுபவர், நயினார் நிதானமாக பேசுபவர். மத்திய தலைமை எல்லாவற்றையும் கவனத்தில் கொண்டே நயினாரை தலைமை பொறுப்புக்கு கொண்டுவந்துள்ளது. எனவே, அவரை உடனடியாக மாற்றும் பேச்சுக்கே இடமில்லை. அதே நேரத்தில், அண்ணாமலைக்கு முக்கியத்துவம் கொடுக்க மேலிடம் விரும்பினால், தேர்தல் நேரத்தில் அவருக்கு வேறு முக்கிய பொறுப்பு வழங்கப்பட வாய்ப்புள்ளது என்று பாஜக வட்டாரங்கள் சொல்லியுள்ளன.
இப்போதுள்ள நிர்வாகிகளில் பெரும்பாலானோர் அண்ணாமலை இருந்தபோது பரிந்துரைக்கப்பட்டு பொறுப்புக்கு வந்தவர்கள். எனவே அவர்கள் நயினார் நாகேந்திரனுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்றும், தலைமை மாற்றம் குறித்த பேச்சை அண்ணாமலை ஆதரவாளர்களே கிளப்பி விடுவதாகவும் ஒரு தரப்பு சொல்ல ஆரம்பித்துள்ளது.
அண்ணாமலை மீண்டும் தலைவர் ஆவாரா என்ற பேச்சு பாஜக வட்டாரத்தில் சலசலப்பை உருவாக்கியுள்ளது என்பதே உண்மை. தலைமை மாற்றம் குறித்த தகவல்கள் உண்மையா, புரளியா என்பது போகப் போகத் தெரியும்.