வாஷிங்டன்,
அமெரிக்காவில் பணிபுரிய வெளிநாட்டினருக்கு எச்-1பி விசா வழங்கப்பட்டு வருகிறது. இந்த வகை விசாவை பயன்படுத்துபவர்களில் 70 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் இந்தியர்கள் ஆவர். இதற்கிடையே எச்-1பி விசா கட்டணத்தை 1 லட்சம் அமெரிக்க டாலர்களாக (இந்திய மதிப்பில் ரூ.88 லட்சம்) அதிபர் டிரம்ப் உயர்த்தினார். ரூ.1.75 லட்சமாக இருந்த இந்த கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டது. இந்த கட்டணத்தை எச்-1பி விசா பெற்று பணியாற்றும் ஒரு பணியாளருக்கும் அவரைப் பணியமர்த்தும் நிறுவனங்கள் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. அமெரிக்காவின் வேலை வாய்ப்புகளில் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை அளிக்கும் நோக்கில் இந்த நட வடிக்கை எடுக்கப்பட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்தது. இது எச்-1பி விசாவை அதிகளவில் பெறும் இந்தியர்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக அமைந்திருந்தது.
இந்த நிலையில், ஹெச்-1பி நடைமுறையில் தனது முடிவிலிருந்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பின்வாங்கி உள்ளார்.
இதுதொடர்பாக தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது ஹெச்1-பி விசா திட்டத்தால் அமெரிக்கத் தொழிலாளர்களின் ஊதியங்கள் குறையுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த டிரம்ப், “ஆம், இதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.. ஆனால் நாம் திறமையான ஊழியர்களை இங்குக் கொண்டுவர வேண்டும்” என்றார்.
அப்போது குறுக்கிட்ட செய்தியாளர் அமெரிக்கர்களிடன் திறன் இல்லை என்று எப்படி கூறுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பியபோது, “இல்லை.. அப்படி பொதுவாகச் சொல்லிவிட முடியாது.. சிக்கலான, பல உயர் தொழில்நுட்பப் பணிகளுக்குத் தேவையான திறமையான பணியாளர்கள் அமெரிக்காவில் இல்லை. அமெரிக்கர்கள் அதை எல்லாம் கற்றுக் கொள்ள வேண்டும். வேலையில்லாமல் இருப்போரை உடனடியாக ராக்கெட் தயாரிக்கும் தொழிற்சாலையில் நியமிக்க முடியாது.. படிப்படியாகவே முன்னேற்ற வேண்டும். உலகம் முழுவதிலும் இருந்து திறமையானவர்களை அமெரிக்கா ஈர்ப்பது மிக அவசியம்” என்று டிரம்ப் கூறினார்.