“என்னையும் ஏமாற்றிவிட்டார் பழனிசாமி!” – தடதடக்கும் தனியரசு நேர்காணல்

ஜெயலலிதா காலம் தொட்டு 10 ஆண்​டு​களுக்​கும் மேலாக அதி​முக அணி​யில் பயணித்​தவர் தமிழ்​நாடு கொங்கு இளைஞர் பேரவை தலை​வர் உ.தனியரசு. அண்​மைக் கால​மாக திமுக அரசுக்கு வாக்​காலத்து வாங்​கு​வ​தில் திமுக-​வினரை விட ஒருபடி மேலாகவே ஊடக விவாதங்​களில் விளாசி வரு​கி​றார். இந்​நிலை​யில், அண்​மை​யில் அறி​வால​யத்​துக்கே சென்று முதல்​வர் ஸ்டா​லினை சந்​தித்​துப் பேசி இருக்​கும் தனியரசு, ‘இந்து தமிழ் திசை’க்​காக அளித்த சிறப்​புப் பேட்​டி.

தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தொடங்கியதன் நோக்கம் என்ன?

கொங்கு இளைஞர்​கள் அரசி​யல் விழிப்​புணர்வு பெற​வும், சமூகத்​தில் அதி​காரத்​தைப் பெற​வும், அதன் மூலம் அவர்​கள் முன்​னேற்​றம் அடைய​வும், அரசுத் துறை​கள் மற்​றும் காவல்​துறை​யின் கொங்கு மக்​கள் மீதான ஒடுக்​கு​முறையை எதிர்த்​துப் போராட​வும் கடந்த 2001-ம் ஆண்டு இந்த பேரவை தொடங்​கப்​பட்​டது.

2011-ல் ஜெயலலிதா உங்களுக்கு பரமத்திவேலூரில் போட்டியிட வாய்ப்பளித்தார். அவரது மறைவுக்குப் பிறகும் அதிமுக-வுடனான உறவைத் தொடர்ந்த நீங்கள் திடீரென தற்போது திமுக பக்கம் செல்ல என்ன காரணம்?

ஜெயலலிதா எனக்கு 2011, 2016 ஆகிய தேர்​தல்​களில் வாய்ப்​பளித்​தார். நானும் அவருக்கு வெற்​றியை பரி​சாகக் கொடுத்​தேன். ஆனால், பழனி​சாமி எல்​லோரை​யும் ஏமாற்​றியதைப் போல் 2021 சட்​டப்​பேரவை தேர்​தலில் என்​னை​யும் ஏமாற்​றி​விட்​டார். இப்​போது அதி​முக உடைந்து கிடக்​கிறது. ஒன்​று​பட்ட அதி​முக-வுக்​காக தொடர்ந்து போராடினேன். இணக்​க​மாகச் செல்ல நான் வைத்த கோரிக்​கைக்கு பழனி​சாமி செவி சாய்க்​க​வில்​லை. ஜெயலலிதா மீதான விசு​வாசத்​துக்​காக, அவரது மறைவுக்​குப் பிறகும், 8 ஆண்​டு​கள் அதி​முக-வுடன் பயணித்​தேன். இப்​போது திமுக-வை ஆதரிக்​கிறேன்.

அதிமுக-வின் தொடர் தோல்வி, பாஜக-வுடனான கூட்டணி ஆகியவற்றால் உங்களுக்கு நெருடல் உள்ளதா?

பழனி​சாமி​யின் பிடி​வாதத்​தால் அதி​முக தொடர் தோல்​வியை சந்​தித்து வரு​கிறது. பாஜக-​வின் சித்​தாந்​தங்​களுக்கு எதி​ராக பேசி வருபவன் நான். இவர்​கள் இரு​வ​ரும் கூட்​டணி சேர்ந்​திருப்​பதும் எனக்கு நெருடலைத் தந்​தன.

தமிழகத்தில் எதிர்க்கட்சிகளின் தாக்கம் எப்படி இருக்கிறது… 2026 தேர்தலில் எப்படி இருக்கும்?

அதி​முக உடைந்து கிடப்​ப​தால் வலிமை இழந்து காணப்​படு​கிறது. பழனி​சாமி தனது செயல் மற்​றும் பேச்​சால் மக்​களைத் தன் பக்​கம் ஈர்க்க எது​வும் செய்​ய​வில்​லை. தேசிய தலை​மையை காட்​டித்​தான் தமிழக பாஜக தேர்​தலை சந்​திக்க விரும்​பு​கிறது. தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், தமிழக மக்​களின் உணர்​வு​களுக்கு ஏற்ப செயல்​பட​வில்​லை. இவரும் தனது பேச்​சாலும், செய​லாலும் மக்​களை இது​வரை ஈர்க்​க​வில்​லை.

தமிழகத்தில் மக்கள் ஆதரவு எந்தக் கூட்டணிக்கு இருக்கிறது… அதற்கு காரணம் என்ன?

நிச்​சய​மாக திமுக கூட்​ட​ணிக்​குத்​தான் ஆதரவு அதி​க​மாக உள்​ளது. முதல்​வர் ஸ்டா​லின் கொண்​டு​வ​ரும் திட்​டங்​கள் அனைத்​தும் பொது​மக்​களிடம் பெரும் வரவேற்​பைப் பெற்​றுள்​ளன. மகளிர் உரிமைத் தொகை திட்​ட​மும், மகளிருக்​கான இலவசப் பேருந்து பயண திட்​ட​மும், பள்​ளி​களில் காலை உணவு திட்​ட​மும் அதற்கு சிறந்த எடுத்​துக்​காட்​டு. மக்​களை பாதிக்​கும் திட்​டங்​கள் எதை​யும் திமுக கொண்​டு​வர​வில்​லை.

திமுக கூட்டணி ஏற்கெனவே ஹவுஸ் ஃபுல்லாக இருக்கும் போது அங்கே உங்களுக்கு இடம் கிடைக்கும் என நம்புகிறீர்களா?

முதல்​வர் ஸ்டா​லின் என் மீது மிகுந்த அன்​பும், மரி​யாதை​யும் வைத்​திருக்​கி​றார். கடந்த 2021 தேர்​தலின்​போதே என்னை கூட்​ட​ணிக்கு அழைத்​தார். அதனால் நிச்​ச​யம் எனக்​கான அங்​கீ​காரத்​தைக் கொடுப்​பார்.

கொமதேக ஏற்கெனவே திமுக கூட்டணியில் இருக்கும் நிலையில், உங்களுக்கான அங்கீகாரம் அங்கே கிடைக்கும் என நம்புகிறீர்களா?

திமுக-​வில் நிச்​ச​யம் எனக்கு உரிய அங்​கீ​காரம் கிடைக்​கும். மேலும், நாங்​கள் ஒன்​றும் கொமதேக-வுக்கு போட்டி கட்சி இல்​லை​யே. அதனால் அக்​கட்​சி​யின் தலை​வர் என்னை எதிர்க்​க​மாட்​டார். இணக்​க​மாகவே இருப்​பார் என நம்​பு​கிறேன்.

திமுக-வுக்கும் தவெக-வுக்கும்தான் போட்டி என்று விஜய் கூறுவதை எப்படி பார்க்கிறீர்கள்?

இது பல்​கலைக்​கழ​கத்தை பால்​வாடி எதிர்ப்​பது போன்​றது. அவர் வேண்​டு​மா​னால் அப்​படி பேசி மகிழ்ந்​து​கொள்​ளலாம். அவரது இந்த பேச்சு சினிமா வசனத்​தைப் போன்​றது; அதெல்​லாம் நடைமுறைக்கு சாத்​திய​மா​காது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.