IPL : இந்தியன் பிரீமியர் லீக் (IPL) ரசிகர்களுக்கு ஒரு பரபரப்பான செய்தி. 2026 ஆம் ஆண்டுக்கான மினி ஏலம் (Mini Auction) குறித்த முக்கியத் தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இது, ஐபிஎல் தொடர் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்திருந்த செய்தியும் கூட. லேட்டஸ்ட் தகவல்களின்படி, ஐபிஎல் 2026 மினி ஏலம் அபுதாபியில் நடைபெறுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. மேலும், ஏலம் நடைபெறும் தேதிகளும் வெளியாகி, எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
Add Zee News as a Preferred Source
ஏலத்தின் இடமும், தேதியும்:
பி.டி.ஐ (PTI) வெளியிட்டுள்ள தகவலின்படி, ஐபிஎல் 2026 மினி ஏலம், ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) தலைநகரான அபுதாபியில் நடத்தப்பட இருக்கிறது. முதலில் டிசம்பர் 14 ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது டிசம்பர் 15 அல்லது 16 ஆகிய தேதிகளில் ஏலம் நடைபெறும் எனத் தெரிகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவுக்கு வெளியே ஏன்? :
ஐபிஎல் ஏலம் இந்தியாவுக்கு வெளியே நடப்பது இது தொடர்ந்து மூன்றாவது முறையாகும். இதற்கு முன்னர் 2023 ஆம் ஆண்டு துபாயிலும், 2024 ஆம் ஆண்டு சவுதி அரேபியாவின் ஜெட்டாவிலும் ஏலம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. ஆஷஸ் தொடர் உள்ளிட்ட பிற பணிகளில் இருக்கும் வெளிநாட்டுப் பயிற்சியாளர்கள் மற்றும் ஒளிபரப்புக் குழுவினர் அபுதாபியில் எளிதாகப் பங்கேற்பதற்கு வசதியாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம். இப்போது நடக்கும் ஏலம் என்பது 2025 ஆம் ஆண்டு மெகா ஏலம் (Mega Auction) அல்ல, 2026 சீசனுக்கானது ஒரு மினி ஏலமாகவே இருக்கும். இந்த சூழலில் வரவிருக்கும் ஐபிஎல் தொடர் குறித்த சுவாரஸ்யமான அப்டேட்டுகளை இங்கே பார்க்கலாம்.
ஆர்சிபி-யின் வெற்றி
முன்னதாக நடந்த ஐபிஎல் 2025 தொடரில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி கோப்பையை வென்று சாதனை படைத்தது. 2008 ஆம் ஆண்டில் ஐபிஎல் தொடங்கியதில் இருந்து, 18 ஆண்டுகள் காத்திருந்த ஆர்சிபி அணிக்கு இதுவே முதல் கோப்பை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு நடப்பு சாம்பியனாக அந்த அணி களமிறங்குகிறது. அத்துடன், அந்த அணியை விற்க உரிமையாளர்கள் முடிவு செய்திருப்பதால், விரைவில் புதிய உரிமையாளர்களின் கைகளுக்கு செல்ல உள்ளது.
சஞ்சு சாம்சன் – ரவீந்திர ஜடேஜா மெகா டிரேட்
ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக வீரர்களைத் தக்கவைப்பதற்கான (Retention) கடைசி தேதி நவம்பர் 15 ஆகும். இந்த கெடுவுக்கு முன்னதாகவே, ஐபிஎல் வரலாற்றிலேயே மிகவும் பரபரப்பான வர்த்தகம் ஒன்று நடக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐந்து முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியும், 2008 சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியும் ஒரு முக்கிய வீரர் பரிமாற்றம் குறித்து தீவிரமாகப் பேசி வருகின்றன.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நீண்ட கால கேப்டனும், விக்கெட் கீப்பர் பேட்டருமான சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்கு வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. ராஜஸ்தான் அணி நிர்வாகத்திடம் சஞ்சு சாம்சன் வேறு அணிக்கு மாறுவது குறித்து விருப்பம் தெரிவித்ததால், இந்த பேச்சுவார்த்தை சூடுபிடித்துள்ளது. சஞ்சு சாம்சனுக்கு ஈடாக சிஎஸ்கே அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குச் செல்லலாம் என்று தெரிகிறது. சாம்சனை வழங்க, ஜடேஜாவுடன் சேர்த்து மற்றொரு வீரரையும் சிஎஸ்கே அணி வழங்க வேண்டும் என ராஜஸ்தான் தரப்பில் நிபந்தனை வைக்கப்பட்டதாகவும் செய்திகள் கசிந்துள்ளன.
வாஷிங்டன் சுந்தருக்கு என்ன ஆச்சு?
குஜராத் டைட்டன்ஸ் (GT) அணியில் இருக்கும் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரை சிஎஸ்கே அணி டிரேட் மூலம் பெற முயற்சிகள் மேற்கொண்டதாக தகவல் வந்தது. ஆனால், 2026 ஐபிஎல் தொடரில் சுந்தருக்குத் தொடர்ந்து விளையாடும் வாய்ப்பு வழங்கப்படும் என குஜராத் அணி நிர்வாகம் உறுதியளித்ததால், அந்தப் பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்ததாகத் தெரிகிறது.
மொத்தத்தில், ஐபிஎல் 2026 மினி ஏலத்திற்கு முன்னரே, சஞ்சு சாம்சன் – ஜடேஜா வர்த்தகம் குறித்த பரபரப்பான தகவல், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நவம்பர் 15 ஆம் தேதிக்குள் இந்த மெகா டிரேட் உறுதிப்படுத்தப்படுமா அல்லது வேறு ஏதேனும் ட்விஸ்ட் ஏற்படுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்
About the Author

Karthikeyan Sekar
I am Karthikeyan, a Senior Sub-Editor at Zee Tamil News Channel, bringing 10 years of experience in the media industry. I have extensive experience working in both news television and online website platforms.
…Read More