திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சிக் காலத்தில், டெண்டர் மூலம் கலப்பட நெய் வாங்கியது தொடர்பாக சிபிஐ தலைமையிலான சிறப்பு விசாரணை குழு விசாரணை நடத்தி வருகிறது.
உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள போலேபாபா ஆர்கானிக் டெய்ரி நிறுவனத்திற்கு ஒப்புதல் கொடுக்கப்பட்டு அவர்கள் ரூ.250 கோடிக்கு 68 லட்சம் கிலோ நெய்யை விநியோகம் செய்ய வேண்டும். ஆனால், 2022-ல் இவர்கள் விநியோகம் செய்த நெய் தரமற்றதாக உள்ளதாக அப்போதைய அறங்காவல் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவர்களை பிளாக் லிஸ்டில் வைத்தாலும், ஒரு லிட்டர் பால் கூட தயாரிக்காத இதே நிறுவனம் தொடர்ந்து 2024 ஜூன் மாதம் வரை கலப்பட நெய்யை விநியோகம் செய்துள்ளது.
இதுதொடர்பாக திண்டுக்கல் ஏஆர் டெய்ரி, திருப்பதி வைஷ்ணவி டெய்ரி, உத்தர பிரதேசத்தில் உள்ள மால் கங்கா டெய்ரி ஆகியோரிடமும் சிறப்பு ஆய்வு குழு விசாரணை நடத்தி பலரை கைது செய்துள்ளது.
இந்நிலையில், அந்த கால கட்டத்தில் நிர்வாக அதிகாரியாக கோலோச்சிய தர்மாரெட்டியை நேற்று சிறப்பு ஆய்வு குழு திருப்பதியில் உள்ள அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தியது. நெய்யின் தரத்தை எவ்வாறு ஆய்வு செய்தீர்கள்? போலேபாபா டெய்ரி நிறுவனத்தை பிளாக் லிஸ்டில் வைத்த பின்னரும் எப்படி அவர்கள் மூலமாகவே நெய் விநியோகம் ஆனது? பக்தர்கள் தொடர்ந்து லட்டு பிரசாதம் குறித்து குற்றச்சாட்டுகளை முன் வைத்தும் ஏன் அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை? என்பது போன்ற பல கேள்விகள் தர்மா ரெட்டியிடம் கேட்கப்பட்டதாக தெரிகிறது.